கனடாவுக்குள் நுழையும் அகதிகள்…!

Image may contain: 4 people, people standing, wedding and outdoor

 

கனடாவுக்குள் நுழையும் அகதிகள்…!

-நடராஜா முரளிதரன்-

கனடா உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு! கடல் வளம், கனி வளம், நீர் வளம், நில வளம் எனத் தொடரும் பெரும் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு! குடித்தொகை வெறும் 37 மில்லியன்கள்தான்! ஆயினும் அல்லலுறும் மக்கள், துன்பத்தால் துடிக்கும் மக்கள், உள்நாட்டுப் போரினால் அவதியுறும் மக்கள் கனடாவுக்குள் நுழைந்து தஞ்சம் கோரும் போது அண்மைக் காலங்களாக விரும்பத்தகாதவர்களாக நோக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இனத்தால், மதத்தால், நிறத்தால் வெள்ளையினத்தவர்களாக அல்லாத வேளைகளில் இதன் உக்கிரம் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. இந்த நாட்டுக்கு அகதிகளாக வந்த தமிழர்களாகிய நாங்களும் இவ்வாறு மற்றவர்களை வெறுக்கும் மனோநிலை கொண்டவர்களாக மாறி வருகின்றோமா ?

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கனடாவில் அகதிகளின் தஞ்சக் கோரிக்கைக்கான காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளது. கடந்த பத்தொன்பது மாதங்களுக்குள் முப்பதினாயிரத்துக்கும் அதிகமான புகலிடம் கோருவோர் அமெரிக்க கனடிய எல்லை வழியாகக் கனடாவுக்குள் நுழைந்துள்ளமை கனடிய ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பழமைவாதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

குடிவரவு மற்றும் அகதிகளுக்கான திணைக்களத்தால் (IRB) கியூபெக்கிற்குள் நுழைந்த 27,674 புகலிடக் கோரிக்கையாளர்களில் பதினைந்து சதவிகிதத்தையே இதுவரை கையாள முடிந்துள்ளது. இதில் பெரும்பான்மையான அகதிக் கோரிக்கையாளர்கள் St. Bernard-de-Lacolle என்ற இடத்தில் உள்ள எல்லை வழியாக 2017 ம் ஆண்டு பெப்ரவரிக்கும் யூனுக்கும் இடையில் வந்தவர்களாவார்கள். கனடிய உச்சநீதி மன்றத்தில் 1985ம் ஆண்டில் நடைபெற்ற பிரபலமான ‘’ சிங்’’ வழக்கு குறித்த தீர்ப்பின் கீழ் கனடிய நாட்டில் தஞ்சம் கோரும் அகதிகள் அனைவரும் வாய் வழி மூல விசாரணைக்குத் தகமை உடையவர்கள்..

அமெரிக்க-கனடிய எல்லை வழியாக நுழையும் புகலிடம் கோருவோர் பிற அகதிக் கோரிக்கையாளர்கள் போலவே பல்வேறு கேள்விகளை எதிர்கொள்கிறார்கள்: அவர்கள் மெய்யான அகதிகள் தானா … தங்களது நாடுகளில் துன்புறுத்தலை எதிர்கொண்டு அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களா என்ற கேள்விகளே அவற்றில் அதிமுக்கியமானவை.! அகதிகள் திணைக்களத்திடம் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி இவ்வாறு நுழைந்தவர்களில் 1,885 அகதிகளே கியூபெக்கில் முறையான அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இது கனடாவில் நடைபெற்ற முழு அகதிகள் வழக்குகளோடும் ஒப்பிடும் பொழுது கணிசமான அளவு குறைவாக உள்ளது.

ஆனால் Canada Border Services Agency இன் தரவு, அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்கள் பலர் நாடு கடத்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எல்லைகளைக் கடந்து கியூபெக்கில் நுழைந்த 157 பேரை CBSA நாடு கடத்தியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

2017 ஏப்ரல் மாதம் முதல் கனடாவுக்கு வந்த 32,173 அகதிகளில் 398 பேர்கள் வரை வெளியேற்றியுள்ளதாக சிபிஎஸ்ஏ தெரிவித்துள்ளது. இவர்களில் 146 பேர் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். மீதமானவர்கள் ஹெய்ட்டி உட்பட கொலம்பியா துருக்கி மற்றும் ஈராக் என 53 நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரபல சட்டத்தரணி லோரன் வால்ட்மேன் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகடத்தல்கள் அகதிகள் திணைக்கள அமைப்பின் தற்போதைய நடைமுறையினை விளங்கிக்கொள்ளவல்ல ஒரு சுட்டி என்று கூறுகிறார். புகலிடம் கோருவோர் தங்களது தஞ்சக்கோரிக்கை முடிவுக்காகப் பதினாறு மாதங்கள் வரை காத்திருப்பதாகப் புள்ளி விபரங்கள் சுட்டுகிறது..

2010ம் ஆண்டில் ஹெய்ட்டியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்திற்குப் பின்னர் அமெரிக்காவினால் ஹெய்ட்டியர்களுக்குத் தற்காலிக பாதுகாப்பு வதிவிட அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியின் கீழ் அமெரிக்காவில் வசித்து வந்த ஹெய்டியர்களே எல்லை கடந்து வந்தவர்கள். டிரம்ப் நிர்வாகம் ஹெய்ட்டியர்களுக்கான வதிவிட உரிமையை முடிவுக்கு கொண்டு வந்ததை அறிவித்தபோது, கனடாவில் அகதி அந்தஸ்தைக் கோருவதற்காக அவர்கள் அமெரிக்க கனடிய எல்லை வழியாக கனடாவுக்குள் உள் நுழைந்தார்கள்.

ஆனால் எல்லையோரத்தில் புகலிடம் கோருவது அவ்வளவு எளிதானது அல்ல. இரு நாடுகளும் அகதிகளுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படுவதால், கனடா மற்றும் அமெரிக்கா இடையே உள்ள இருநாட்டு உடன்படிக்கையின்படி இரு நாடுகளும் உத்தியோகபூர்வ எல்லைகளை அடைந்த தஞ்சம் கோருவோருக்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டும். எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமான நுழைவுரிமைக்கு வருகை தரும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், புகலிடம் கோருவோர் உத்தியோகபூர்வ எல்லைக் கடப்புகளுக்கு இடையில் நுழைவதன் மூலம் திருப்பித் தள்ளப்படுவதைத் தவிர்க்கலாம். இதனால் ஆயிரக்கணக்கான அகதி நுழைவாளர்கள் பயனடைந்துள்ளனர்.

நைஜீரியர்கள் கனடாவிற்குப் பதிலாக அமெரிக்க விசாக்களைப் பயணிக்கத் தேர்வு செய்வது ஏன் ? சட்டத்தரணி வால்ட்மேன் அமெரிக்க விசா வழங்கல் முறைமை கனடாவின் விசா வழங்கல் முறைமையை விட மிகவும் தாராளமானதாகக் காணப்படுவதாகச் சொல்லுகிறார். தஞ்சம் கோரும் நைஜீரியர்கள் பலர் பயணிகளுக்கான அமெரிக்க விசாக்களைப் பெறுகின்றனர். அதனை அவர்கள் அமெரிக்கா வருவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் கியூபெக் எல்லை வழியாகக் கனடாவிற்குள் நுழைந்து புகலிடம் கோரி வருகிறார்கள்.

இந்த வருடம், குடிவரவு அமைச்சர் அஹமது ஹுஸென் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகள் நைஜீரியாவுக்குப் பயணம் செய்தனர். நேரடியாக நைஜீரிய அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விசா தொடர்பாக எழும் அகதி நுழைவுப் பிரச்சினைகளைப் பேசியிருந்தார்கள். கனடிய எல்லைக்குள் நுழைந்து நைஜீரியர்கள் புகலிடக் கோரிக்கை கேட்பதை நைஜீரிய அரசாங்கம் தடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்பதும் கனடிய அமைச்சரின் நைஜீரிய அரசினை நோக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது.

2018ம் ஆண்டுக்கான கனடிய மத்திய அரச வரவுசெலவுத்திட்டதின் ஒரு பகுதியாக அகதிகள் திணைக்களத்துக்கு 72 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, இது அகதிகளின் தஞ்சக் கோரிக்கை குறித்த முடிவெடுக்கும் முறைகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒருவர் மேன் முறையீட்டுக்குச் செல்வதன் மூலமோ அல்லது சட்டவாக்க வரைமுறைகளைப் பயன்படுத்துவதன் ஊடாகவோ தான் கனடாவில் வாழும் காலத்தை நீடித்துக்கொண்டு செல்வார். அவ்வாறு போராடிக் கொண்டிருக்கும் வதிவிட உரிமையற்ற அகதிகளை விரைவாக நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று கொதிக்கிறது பழமைவாதக் கட்சி! தற்போதைய நிர்வாக அமைப்பு முறைமைகள் அதற்கு எற்றதாக அமையவில்லை என்பது அவர்களது குற்றச்சாட்டு!

ரொறொன்ரோவிற்கு வரும் அகதிகளுக்கான செலவீனங்கள் அதிகமாக இருப்பதால் நகர நிர்வாகம் ஒன்ராரியோ மாகாண அரசிடம் மேலதிக உதவியைக் கோருகிறது. ஒன்ராரியோ மாகாண அரசு கனடிய மத்திய அரசுக்கு கூடுதல் நிதியுதவி செய்யுமாறு அழுத்தம் கொடுக்கிறது. வரி கொடுக்கும் வசதி படைத்தோர் தங்கள் வரிப்பணத்தை அகதிகளுக்காகச் செலவிடுவதை விரும்புவதில்லை. அகதிக் கோரிக்கையாளர்களது வழக்குகளை மற்றும் அவர்கள் குறித்த பிரச்சினைகளை விரைவாகக் கையாள நிதி ஒதுக்கப்படுவதைப் பழமைவாதிகள் வெறுக்கிறார்கள். ஹார்ப்பரது ஆட்சிக் காலத்தில் இது அனைத்துலக உடன்படிக்கைகளைப் புறந்தள்ளும் வகையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் துணையோடு உள்நாட்டுக் கலவரங்கள், போர், இயற்கை அனர்த்தம், அரச அடக்குமுறை போன்றவற்றால் சொல்லொணாத் துன்பங்களைச் சுமக்கும் மக்கள் கனடாவில் தஞ்சம் கோரும் வேளைகளில் கனடிய அரசு அவர்களை நிராகரிக்காது ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதே மனிதநேயவாதிகளின் பெரு விருப்பாகும்.

(இம் மாத ‘தேசியம்’ சஞ்சிகையில் பிரசுரமாகியது)

Share This Post