“ஏரியல் ஷரோன்” இறந்தாரா ?

-நடராஜா முரளிதரன்-

சில நாட்களுக்கு முன் இறந்த முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் “ஏரியல் ஷரோன்” மேற்குலகத் தலைவர்களின் அஞ்சலியோடு,   அரச மற்றும் பூரண இராணுவ மரியாதையோடு அவரது பண்ணை வீட்டுத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு விட்டார்.  இறக்கும்போது அவருக்கு  85 வயது. 2006ஆம் ஆண்டு முதல், “ஏரியல் ஷரோன்”  இஸ்ரேலின்  மருத்துவமனையொன்றில் இறக்கும்  வரை நினைவுகளற்ற “கோமா” நிலையில் உயிருள்ள சடலமாகவே இருந்து வந்துள்ளார்.   .

பல்வேறு  பதவிகளை வகித்த  “ஏரியல் ஷரோன்”  இஸ்ரேலின்  பிரதமராக 2002 முதல் 2006 வரை இருந்திருக்கின்றார்.   அதே போல் 1981  இலிருந்து 1983 வரை இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அந்தக் காலப்பகுதி வரலாற்றில் என்றுமே  சர்ச்சைக்குரிய காலப்பகுதியாகவே அமையும். ஈழத்தமிழர்களான நாமும் அந்தக் காலப்பகுதி தொடர்பான வரலாற்றோடு பல வழிகளிலும் தொடர்புடையவர்களாக உள்ளோம்.

“ஷரோன்” 2005 இல் “காஸா” பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகளைத் திரும்ப வரவழைத்த வேளையில் அனைத்துலகச் சமூகத்தின் பாராட்டினைப் பெற்றுக்கொண்ட தோற்றப்பாடு ஒன்று இருந்தது.  அரசியல் விமர்சகர்களது பார்வையில்   அவர் இஸ்ரேலிய நிறவெறி அரசின் முக்கிய சிற்பி. “ஷரோன்”  1982 இல் லெபனான் நாட்டின் Sabra மற்றும் Shatila பாலஸ்தீன அகதி முகாம்களில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட படுகொலைகள் அவரது தனிப்பட்ட உத்தரவின் பேரிலேயே நிகழ்த்தப்பட்டதாகவும் அதற்கான பொறுப்பு  அவருடையதெனவும் மனித உரிமை அமைப்புகள், அனைத்துலக ஊடகங்கள் கண்டனங்களை வெளியிட்டிருந்தன. ஏறத்தாள  ஆயிரம் பாலஸ்தீனியப் அப்பாவிப் பொதுமக்கள் அந்தச் சம்பவங்களின் போது கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

“ஏரியல் ஷரோன்” மிகவும் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு மனிதர் . அவர் “இஸ்ரேல்” என்ற நாட்டின் கட்டுமானம் தொட்டுப்   பல விடயங்களில் தொடர்ந்து  ஈடுபட்டு வந்திருக்கின்றார்.  அவர் “இஸ்ரேல்” நடத்திய ஒவ்வொரு போர்களிலும் பங்கு கொண்டு சண்டையிட்டவர்.  பல இஸ்ரேலிய இராணுவத் தளபதிகள் செய்தது போன்று  பின்பு அரசியலுக்குள்ளும் நுழைந்து கொண்டவர். 

 அவர் 1948இல் “இஸ்ரேல்” என்ற நாடு உருவாக்கப்பட்ட  காலத்திலிருந்தே இராணுவத்தில் மேலதிகாரிகளின் கட்டளைகளை மீறிச் செயற்பட்டு வந்துள்ளார்.  1953இல் மிகவும் நன்கு அறியப்பட்ட இராணுவ நடவடிக்கையாக “ஏரியல் ஷரோன்”   “பிரிவு 101” க்குத் தலைமை தாங்கி  Qibya என்ற  கிராமத்தில் நிகழ்த்திய படுகொலைகள் மிகவும் கொடூரமானவையாகக் கருதப்படுகின்றது. இந்தப் பிரிவு இஸ்ரேலியர் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில் பதிலடியாக பாலஸ்தீனக் கிராமங்கள் பலவற்றில் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்திருக்கின்றது. 

 இதிலுள்ள  சுவாரசியமான விடயம் என்னவென்றால் இவ்வாறான  நடவடிக்கைகளின் மூலமாக இராணுவத்தில் பாராட்டுக்களுடனும், அதிக பொறுப்புகளுடனும் அவரால் மேல்நோக்கி முன்னேற, முக்கிய பதவிகளைப் பெற முடிந்தது என்பதே!  “டேவிட் பென் குரியன்”  இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரி மட்டுமல்லாது “இஸ்ரேல்” என்ற நாட்டையே நிர்மாணித்தவராக விதந்துரைக்கப்படுபவர். அவ்வாறான “பென் குரியனாலேயே”  ஒரு “நோயியல் பொய்யர்” என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் இந்த “ஏரியல் ஷரோன்”. ஆனாலும் , :”பென் குரியன்” தொடர்ந்து “ஏரியல் ஷரோனை” பாலஸ்தீனக் கிராமங்களையும், அண்டை அரபு நாடுகளையும் அச்சுறுத்தப் பயன்படுத்திக் கொண்டார். 

பாலஸ்தீனியக் கிராமங்களும்,  அருகிலுள்ள நாடுகளும்  கட்டுப்படுத்தப்படுவதற்கு  மனிதாபிமானமற்ற முறையில் பிரயோகிக்கப்படும்  வன்முறை கையிலெடுக்கப்பட்டது. அவ்வாறான  பிரயோகிப்பதற்கு ஈவிரக்கமில்லாத , மனிதாபிமானச் சட்டங்களைக் கருத்திற் கொள்ளாத “ஏரியல் ஷரோன்” போன்ற இரும்பு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.  

“ஏரியல் ஷரோன்” மிக முக்கியமான  பங்கொன்றினை  லெபனான் போரின் போது வகித்திருந்தார்.   உண்மையில் அவர் பாதுகாப்பு மந்திரியாக இருந்த அந்த வேளை  “இஸ்ரேலிய” அரசு ஆரம்பத்தில் திட்டமிட்டதைவிடக் கடுமையான நடவடிக்கையில் அவர் “இஸ்ரேலியப்” படைகளை ஈடுபடுத்தி விட்டார் என்று கூறப்பட்டது. இன்னும் சில உயரதிகாரிகள் இஸ்ரேலிய அரசாங்கத்தை “ஏரியல் ஷரோன்”   ஏமாற்றிவிட்டார் என்றும் வாதிட்டனர். இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன் தோன்றிய “ஏரியல் ஷரோன்”  “இதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக நான் கருதவில்லை. அரபுக்கள் தங்களுக்குள் தாங்களே சுட்டுக் கொன்றார்கள்” என்ற முழுப்பொய்யை அவிழ்த்து விட்டார். இறுதியில் விசாரணைக் குழு “எரியல் ஷரோன்” தன் முழு வாழ்நாள் காலத்திலுமே பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்ற முடிவைப் பரிந்துரைத்திருந்தது..

 ஆனால் வரலாற்றின் படிகளில் அவர் இன்னும் மேலே சென்று “இஸ்ரேலின்”  பிரதம மந்திரி ஆனார்.  பிரதம மந்திரியே அனைத்து அமைச்சுகளையும் மற்றவர்களுக்குப் பிரித்து வழங்குபவர். அந்த வகையில் குறிப்பிட்ட காலம் வரை அந்தப் பொறுப்பையும் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டார் “ஷரோன்”. அவ்வாறு  பிரதமராக இருந்த வேளையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பில் அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த வேளை  இரண்டாவது  Intifada கிளர்ச்சி பாலஸ்தீனர்களால் மேற்கொள்ளப்பட்ட காலகட்டம்.  பின்பு “காஸாவில்” நிலைகொண்டிருந்த இஸ்ரேலிய இராணுவத்தை  “ஏரியல் ஷரோன்” திரும்பப் பொற்றுக்கொண்டமை குறித்து அரசியல் விமர்சகர்களால் நிறையவே பேசப்பட்டது. “லிகுட் கட்சியின்” கடும் எதிர்ப்பு அந்த நடவடிக்கைக்கு எதிராக எழுந்தது.

“ஏரியல் ஷரோன்”  இஸ்ரேலின் மிக ஊழல் மலிந்த அரசியல்வாதிகளில் ஒருவரும் கூட! அவர் மீது லஞ்ச ஊழல் மற்றும் பணமோசடி தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன.  அவர் மீதான  குற்றச்சாட்டுகள் சூடு பிடித்து   குற்றவியல் விசாரணைகள்  நடைபெற்றுக் கொண்டிருந்த  மிக முக்கியமான காலகட்டத்தில்தான் அவர்  நோய்வாய்ப்பட நேர்ந்தது. அந்த நேரத்தில் அவர் “கோமா” நிலைக்குச் சென்றதால் விசாரணையிலிருந்து ஒருவாறு மேலும் தப்பிக்க முடிந்தது. 

 அதனால் பிரதம மந்திரிக்கு எதிரான குற்றவியல் விசாரணை முடக்கப்பட்டதால் அவரது கட்சியான “கட்டிமா” விசாரணையின் விளைவுகளிலிருந்தும், எழக்கூடிய  நெருக்கடிகளிலுமிருந்தும் மீண்டது. “கட்டிமா” கட்சி “ஏரியல் ஷரோனால்” நிர்மாணிக்கப்பட்ட கட்சியும் கூட. பின் அடுத்து வந்த தேர்தலைக் கட்சித் தலைவர்  அற்ற நிலையிலும் “கட்டிமா” கட்சி சந்தித்தது.  

 இந்தச் சந்தர்ப்பத்தில்  “ஏரியல் ஷரோன்” பாலஸ்தீனிய அரசை நிர்மாணித்து  மேலும் பிராந்திய சலுகைகளை பாலஸ்தீன மக்களுக்கு வழங்குவதற்குத்  தயாராக இருந்தார் என்பது மாதிரியான செய்திகள் அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகின.

 இஸ்ரேலின் மிகவும் தந்திரமான  அரசியல்வாதிகளின் பட்டியலில் “ஷரோனுக்கும்” மிக முக்கிய இடமொன்றுண்டு.  “ஏரியல் ஷரோன்” படை வீரனாக இருந்த வேளையில் தான் விரும்புவதையும், நம்புவதையும் நடைமுறைப்படுத்த உத்வேகம் கொண்டிருந்தார். அதனால் மேலதிகாரிகளின் கட்டளைகளைப் பொருட்படுத்தாமல் உதாசீனம் செய்தார். யூதர்களுக்குத் தேவையானதும், அடிப்படையானதும்  எதுவென்று தனக்குத் தெரியும் என்பது  அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத  நம்பிக்கை! ஆகவே  விசயங்களைத் தனது சொந்த வழியில் செய்து முடிக்க  அவர் தனது  பிரதமர் அலுவலகத்தைச் சுற்றியே அதிகார மையத்தைக்,  கட்டளை மையத்தைப் பலமாகக் கட்டமைக்க முயற்சி செய்யததில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

அவர் பிரதம மந்திரியாக அதிகாரத்தைக் கையிலெடுத்த வேளையில்  பாலஸ்தீனியப் பிரதேசங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காலகட்டத்தின்  நெருக்கடி மிகுந்த குழப்பமான சூழ்நிலை உருவாகிறது .  இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் “ஏரியல் ஷரோன்” எவ்வாறு தனது போர்க்காலங்களில் வரம்பு மீறியும், அத்துமீறியும் செயற்பட்டாரோ அவற்றையே முன்மாதிரியாகக் கொண்டு செயற்படும் சூழ்நிலை உருவாகியது. ஏனெனில் தற்போது நாட்டின் தலைமைப் பதவியே அவ்வாறான நடவடிக்கைகளால் மேலெழுந்த ஒருவரின் (ஏரியன் ஷரோனின்) கரங்களில் உள்ளது.   வயதில் குறைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தினர், இளம் இடைநிலை இராணுவ அதிகாரிகள் தங்களது கட்டுக்குள் இருந்த பிரதேசங்களில்  “ஏரியல் ஷரோனின்”  சொந்த எடுத்துக்காட்டையே  தூண்டியாகக் கொண்டு நடந்து கொண்டார்கள் என்று சொல்ல முடியும்.

“காஸாவிலிருந்து” இஸ்ரேலிய இராணுவத்தை மீளப்பெற்ற  “ஏரியல் ஷரோன்”,  “மேற்குக் கரையில்” (West Bank)   உயர்ந்த சுவர்களை வட்டவடிவில் நிறுவுவதன் மூலம் இஸ்ரேலிலிருந்து மேற்குக்கரையை முற்றாகப்  பிரிப்புச் செய்கிறார். “மேற்குக் கரைப்” பகுதியிருந்து தற்கொலைக் குண்டுதாரிகள் இஸ்ரேலுக்குள் நுழைவதையும், தாக்குதல் நிகழ்த்தப்படுவதையும் கட்டுப்படுத்தும் பொருட்டு இஸ்ரேலியப் பொதுமக்களைக் காப்பதற்காகவும், இஸ்ரேலின் இறைமையை நிறுவுவதன் பொருட்டும் தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டதற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. 

உண்மையில் இந்த முடிவுகளின் பின்னணியை ஆழமாக ஆய்ந்தால் ‘ஏரியல் ஷரோன்” மிக இராஜதந்திரமாகச் செயற்பட்டுத் தான் சமாதானத்துக்குத்  தயார் என்ற  “போலி மாயை” ஒன்றைக் கட்டி எழுப்புகிறார். “காஸா” பகுதியிலிருந்து துருப்புக்கள் திருப்பி அழைக்கப்பட்டமையினால் அந்தப் பகுதியில் நடைபெற்று வந்த யூதக் குடியேற்றம் கட்டுப்படுத்தப்படுகிறது. பல யூதக் குடியேற்றங்களிலிருந்து வெளியேற மறுத்த யூதர்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுகிறார்கள். இது உண்மையில் யூதர்களின் நலன்களுக்காகவே நிகழ்த்தப்பட்டது. 

அத்துடன் இஸ்ரேல் பாலஸ்தீனர்களோடு சமாதானத்துக்குத் தயார் என்ற சுலோகத்தைக் கபடமாக அனைத்துலகின் முன் “ஏரியல் ஷரோன்” முன்வைத்திருந்தார். இத்தகைய நடவடிக்கைகளினால் “ஏரியல் ஷரோன்” என்ற கடும் யூதத் தீவீரவாதியொருவர் உலகின் கண்களுக்கு மிதவாதியாகத் தோற்றம் பெறுவதை நோக்கலாம். ஆனால் “இஸ்ரேல்” தொடர்ந்தும் “காஸாப்” பகுதிக்குக் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு  வரி      விதிப்பதையும் ,பல்வேறு தடைகளை நடைமுறைப்படுத்துவதையும் அவதானிப்பதன் வாயிலாகக் காஸாப் பிரதேசம் தொடர்ந்தும் பிரகடனப்படுத்தாத இஸ்ரேலின் கட்டுக்குள் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

“ஏரியல் ஷரோனின்”  பிரதான ஆலோசகர்களில் ஒருவரான  Dov Weissglass, இவ்வாறு உரைக்கின்றார் // “காஸா” பகுதியிலிருந்து இஸ்ரேலியத் துருப்புக்களைப் பின்வாங்குவதானது உண்மையில் ஆக்கிரமிப்பைக் கைவிட்டதாகாது. இன்னும் “காஸா” பகுதியின் கட்டுப்பாட்டை “இஸ்ரேல்”  இழப்பதாகவும் அதனைக் கருதி விடக் கூடாது.  இது சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இரு தரப்பும் மேற்கொள்ளுகின்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் அல்லாது ஒரு தரப்பு முன்னெடுக்கும் நடவடிக்கையாகும். இது அனைத்துலக சமூகத்தின் கண்களில் “இஸ்ரேல்” பாலஸ்தீனர்கள் தொடர்பாக விருப்புடன் மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சியாகவே நோக்கப்படும். அதே வேளை பாலஸ்தீனர்கள் சமாதான முயற்சிக்குத் தடையாக உள்ளார்கள் என்ற தோற்றப்பாட்டையும் எம் அணுகுமுறையினால் அனைத்துலக சமூகத்திற்கு நாம் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இதுவே “ஏரியல் ஷரோனின்” அடிப்படைத் திட்டம்.//

“ஏரியல் ஷரோன்” மனித நேயங்களைத் துறந்த அப்பாவி மனிதர்களைத் துடைத்தழித்த   அடையாளத்தையுடைய மனிதன்!  அவரது  திட்டமிடப்பட்ட தாக்குதல்களின் கீழ் பாதிக்கப்பட்ட லெபனிய மக்கள், பாலஸ்தீன மக்கள் என்று வகைப்படுத்திச் செல்லலாம்.  “இஸ்ரேலிய” சமூகத்தையும், “சியோனிஸ” இயக்கத்தையும்   பாலஸ்தீனியர்களை நோக்கிய தடத்தில்   மிக இருண்மையான  அம்சங்களைப் போர்த்திக் கொண்ட வரலாற்றையுடைய மனிதனாக “ஏரியல் ஷரோன்” காட்சியளிக்கிறார். 

“இஸ்ரேல்” உருவாக்கப்பட்ட வேளையில் “நக்பா” என்ற அரபுச் சொல்லாடல் மிகப் பிரசித்தமானதொன்று! 1947க்கும் 1949க்கும் இடையில் (“இஸ்ரேல்” என்ற நாடு உருவாகிய காலகட்டம்) ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் தப்பியோடியோடியோ , வெளியெற்றப்பட்டோ நிகழ்ந்த மானுடத் துயரத்தை, மாபெரும் மக்கள் இடப்பெயர்வை “நக்பா” என்ற அரபுச் சொல்லால் அழைப்பார்கள்.

“இஸ்ரேல்” என்ற நாடு நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்  “நக்பா” என்ற துயர நாடகத்தை அரங்கேற்றியவர்  “பென் குரியன்” என்ற  , “இஸ்ரேலின்” முதல் பிரதம மந்திரி! அவரை வரலாற்றாசிரியர்களும், மனித உரிமையியலாளர்களும் மத்திய கிழக்கில் மானுடத்துக்குத் தீங்கு விழைவித்த முதல் “போர் குற்றவாளி” என்று பிரகடனம் செய்வார்கள். அந்த வரிசையில் அதே அரசியல் விமர்சகர்களால் “இரண்டாவது போர் குற்றவாளி”  என்று பட்டியலிடப்படுகிறார் இந்த “ஏரியல் ஷரோன்”.  .

 “ஷரோன்” பொய்கள் நிறைந்த, சூழ்ச்சித்திறன் வாய்ந்த, கபடம் கொப்பளிக்கும்   இராணுவத் தளபதி!  அரசியலிலும் “ஷரோன்”  இவ்வாறான அனைத்துத் திறன்களையும் ஒருங்கே குவித்துச் செயற்படும் சாணக்கியம் கொண்டிருந்தமை இஸ்ரேலுக்குள் உள்ளிருந்த அரசியலாளர்களைக்கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.   இலஞ்ச ஊழல்கள், பண மோசடிகள் என்று “ஷரோன்”  அகப்பட்டுக் குற்றம் சாட்டப்பட்ட பின்பும்  அதிகாரத்தையும்,  பதவிகளையும் மிகச் சுலபமாகக் கையாளுபவராக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.   .

இஸ்ரேலில் வாழும் யூத இடதுசாரிகளுக்குள் இவ்வாறான ஒரு பேச்சு இருந்து வந்துள்ளது. என்றோ ஒரு நாள் “ஷரோன்”  பிரதமரானால் தாங்கள் எல்லோரும்    நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்பதே அது! ஆனால் அது உண்மையில் நிகழ்ந்த போது  , யாரும்  நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.   மிகச் சிலர் வெளியேறினார்கள்தான். காலம் செல்லச்செல்ல,  நினைவுகள் மங்க “ஷரோன்” அணிந்திருந்த புதியவகை “மிதவாதப் பாத்திரப் போர்வை” இடதுசாரிகளின் பயத்தைப் போக்கிவிட்டதென்றே கருத வேண்டியுள்ளது. இந்த மிதவாதப் போக்கினை “ஷரோன்”  பிரதமராவதற்கு முன்பே வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார். 

 பழையவற்றை மன்னித்துப் புதியவற்றைக் கருத்தில் கொள்ள முனைகின்றன  நிதானமான ஓர் நபர் என்ற கருத்தியலை “ஷரோன்”  கட்டமைக்க முன் நிகழ்ந்த ஒரு மிக முக்கிய விடயத்தினை நாம் இங்கு எடுத்துக் கொள்ளலாம்.  “எகுட் பாரக்”  பிரதம மந்திரியாக இருந்த போது “அல் அக்சா” மசூதி மீது பாலஸ்தீனியர்களுடனான  வன்முறை மோதலைத் தூண்டும் வகையில் “ஷரோன்” மிகப்பெரும் மோதலுக்கான அடித்தளத்தை அமைத்துச் சென்றார்.   அதனால் உணர்ச்சிவசப்பட்ட , ஆத்திரமூட்டப்பட்ட பாலஸ்தீனியர்கள்  இரண்டாம் Intifada கிளர்ச்சியை ஆரம்பிக்க  வழிவகுத்த முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்றாக அமைந்தது .  ஏனெனில் இந்த இரண்டாம் கட்ட “இன்டிபடா” வெடித்தவுடன் “இஸ்ரேலின்” பாதுகாப்பு என்ற பிரச்சினை முக்கியத்துவம் அடைகிறது. எனவே அந்தச் சந்தர்ப்பத்தில் “இஸ்ரேலிய” மக்களுக்குத் தங்களைக் காப்பற்றும் இரட்சகனாகக் காட்சி தருகிறார் “ஷரோன்”. ஆகவே அவரால் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. 

இஸ்ரேலின் வலதுசாரித் தீவிரவாதக் கட்சியான “லிகுட் கட்சி” “காஸா” பகுதியிலிருந்து துருப்புக்களை வரவழைத்துக்  கொண்டு மேலும் முன்னோக்கிச் செல்லத்  தயாராக இல்லை, அதனால்தான் “ஷரோன்”  மிகவும் புத்திசாலித்தனமான உத்திகளோடு “கட்டிமா” கட்சியை உருவாக்கியிருந்தார்.   இதனைப் பெரும்பாலும் ஒரு குறியீட்டு விடயமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் குறியீட்டு நடைமுறையை நன்றாகப் புரிந்து கொண்டு அரசியல் சதுரங்கத்தில் காயை நகர்த்தும் வேலையை  “ஷரோன்” கச்சிதமாகக் கையாண்டிருந்தார்.  

ஆனால் இந்தச் சமாதான முன்னெடுப்புகளை ஊக்குவிக்கும்  அல்லது பாலஸ்தீனியர்களின்  உரிமைகளை அங்கீகரிக்கும்   கட்சி அல்ல “ஷரோனின்” “கட்டிமா” கட்சி! ஆனால் நடைமுறையில் ஆக்கிரமிப்பை நாசூக்காக அனைத்துலக சமூகத்தைச் சாந்தப்படுத்திக்கொண்டு தொடர்வதே “கட்டிமா” கட்சியின் உத்தி! “ஷரோன்” “கட்டிமா” கட்சியை வலதுசாரித் தீவிரவாதக் கட்சியான “லிகுட்” கட்சியினுள்  முரண் அணியிலிருந்தவர்களை வைத்துக் கட்டியதால் “மத்தியத்துவ வாதக் கொள்கை” கொண்ட கட்சியாகக் கருதப்பட்டது. அவ்வாறு சொல்லவும் பட்டது.

2005இல் “ஷரோன்”   “காஸா” பகுதியிலிருந்து 8,000 குடியிருப்பாளர்களை  விலக்கிக் கொண்டார். ஆனால் “மேற்குக் கரையில்”  அவர் இணைத்துக் கொண்ட  புதிய குடியிருப்பாளர்களின் தொகை 20,000. இதிலிருந்து  “ஷரோன்” 2005இல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பிரதேசங்களில்  அனைத்துலகச் சட்டவிரோத யூதக் குடியிருப்பாளர்களின்   எண்ணிக்கையைப் 12,000 பேர்களினால்  அதிகரித்துள்ளார் என்பதுதான் உண்மை நிலை! ஆனால்  அனைத்துலக ஊடகங்கள் இது குறித்துக் கவலைப்படவோ, அலட்டிக் கொள்ளவோ இல்லை. 

ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாகக் “கோமா” நிலையில் இருந்து வந்த  “ஷரோனின்”  மரணம் இன்று இஸ்ரேலிய அரசியலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. பக்கவாதம் ஏற்பட்டுக் “கோமா” நிலைக்குச் செல்பவர்கள் நெடுநாள் உயிர் வாழ்வதில்லை. ஆயினும் “ஷரோனின்” குடும்பத்தவர்களின் வற்புறுத்தலில் “உயிர் காக்கும் கருவிகளின்” துணையுடன் நினைவிழந்த சடலமாக வீழ்ந்து கிடந்த “ஷரோனின்” யானை போன்ற உடலம் மீளாத் துயிலை அடைந்து விட்டது. ஆயினும் “ஷரோனின்” வாழ்வும் , வரலாறும் மத்திய கிழக்கு அரசியலில் தொடர்ந்தும் பேசு பொருளாகவே இருக்கப் போகிறது. .

“இஸ்ரேலிய”  சமூகத்தின் மற்றும் “சியோனிச” இயக்கத்தின்  இருண்ட அம்சங்களை மிகக் காட்டமாக  அடையாளப்படுத்துபவராக விளங்கிய குறியீடாக இஸ்ரேலிய இடதுசாரிகள் “ஷரோனை” எண்ணுகிறார்கள். இடதுசாரிகள், மாற்றுக் கருத்தாளர்கள்  மத்தியில் இன்னுமொரு  நம்பிக்கை காத்திருந்ததாக சில விமர்சனக் குரல்கள் அளவிடுகின்றன. அது  “ஷரோனின்”  போர் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்கிறது.

இஸ்ரேலின்  வரலாற்றில் வன்முறையை வெறி கொண்டு வெளிப்படுத்திய   இரண்டாவது  கொடிய மனிதராகவும், மனிதத்துவத்திற்கு எதிரான  இரண்டாவது போர்க் குற்றவாளியாகவும்  “ஷரோனை”  சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமென்று கருதும் யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டுக்குள்ளும் இருக்கின்றார்கள். உலகின் மனிதாபிமானச் சட்டங்களைப் புறக்கணித்து “ஷரோன்” மனித குலத்துக்கு இழைத்த கொடுமைகளுக்கு,   குற்றங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு உடையவராகிறார்.   அவர் இறந்த பிறகு அதற்கான வாய்ப்பு இல்லாமலாகின்றது. 

“எப்படி வெல்லமுடியும் என்பதைத்  தெரிந்து வைத்திருந்த அபார திறமைகொண்ட போர்வீரன்” என்று இஸ்ரேல் அதிபர் “ஷிமோன் பெரஸ்”, “ஏரியல் ஷரோனின்” இறுதி அஞ்சலி நிகழ்வில்  பாராட்டிப் பேசுகிறார். மிகக் கடுமையான விமர்சனங்களுக்குக் காரணமான போதிலும் யூத மக்களைப் பாதுகாக்கும் தனது இலக்கிலிருந்து அவர் ஒருபோதும் விலகிச் செல்லவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் “ஜோ பைடன்” இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரைக்கின்றார். “ஏரியல் ஷரோனை” வழியனுப்பி வைக்கும் அந்தச் சாவு வீட்டில் மேலும்  பல மேற்குலகத் தலைவர்கள் பங்கு கொண்டு தங்கள் பங்குக்கு அவரது பங்களிப்பை விதந்துரைக்கும் போது இவ்வாறான “போர் குற்ற விசாரணை” சாத்தியமானது தானா ? என்ற கேள்வியே இயல்பாக எழும்! ஆனால் மாற்றுக்குரல்களது கோரிக்கைகள், வேண்டுதல்கள் காலம் தாழ்த்தியாவது வரலாற்றில் நிரூபிக்கப்பட்டும், நிறைவேற்றப்பட்டும் வந்துள்ளது என்ற உண்மையும் நம் முன் வந்து விழுகின்றது. எனவே அதனை நாம் முற்றாக மறுதலித்து வரலாற்றை முன்நோக்கி நகர்த்திவிட முடியாது.

எனவே இவ்வாறான பெரும் குற்றங்களை இழைத்தவர்கள்    அதற்குப்  பொறுப்புக் கூறாமல் , அதற்கு  ஒரு விலையும்  செலுத்தாது போனால் எதிர்கால உலகு இது போன்ற எண்ணற்ற  பெரும் கொடுமைகளையும், இன அழிப்புகளையும் மேலும் எதிர் கொண்டாக வேண்டிய இக்கட்டு ஏற்படுகிறது. அனைத்துலக சமூகம் அதனைத் தொடர்ந்து அனுமதிக்கப் போகின்றதா ? என்ற சிக்கலான வினா எம் மத்தியில் எழுகின்றது. 

மானுடத்துக்கு விரோதமான  கொடூரமான குற்றங்களை நிரந்தரமாக்க முடியாது. நாகரீக சமுதாயமொன்றில்  அதற்கான சின்னமாக, அடையாளமாக, குறியீடாகக் குற்றமிழைத்தவர்கள் அனைத்துலகின் நீதிமன்றுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்களாக  ஆக்கப்படுதல் அவசியமானது. ஆனால்  அவ்வாறான செயற்பாட்டுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கும் மக்கள் கூட்டம் கடுமையான ஏமாற்றங்களைச் சந்தித்து வருகிறது. வலிமை பொருந்திய நாடுகளின் பல்வேறு நலன்கள் இதற்குள் குறுக்கிடுவதால் அனைத்துலகச் சட்டங்களை நடைமுறைப்படுவதில் ஏற்படும் இழுபறி சொல்லி மாளாதது.  எனவேதான் இங்கு “ஏரியல் ஷரோன்” இறந்து விட்டாரா? என்றும் யோசித்துப் பார்க்கத் தோன்றுகிறது. இல்லை! இன்னும் பல “ஏரியல் ஷரோன்கள்” இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்!

Share This Post