மொழியுரிமைப் போராட்டத்தில் இடம்பெற்ற வழக்கும், தாக்கமும்

த. மனோகரன்

நாட்டின் இனத்தின் மொழியின் வரலாற்றோடு தொடர்புடைய பல நிகழ்வுகள் காலத்திற்குக் காலம் இடம் பெறுவது வழமையாகும். கடந்து வந்த பாதையில் நிகழ்ந்த சம்பவங்களை மீள மதிப்பீடு செய்து எதிர்காலத்தில் விடப்பட்ட தவறுகள் திரும்பவும் இடம் பெறாத வகையில் நமது சிந்தனையை, செயற் பாடுகளைச் சீர்செய்து கொள்வதற்கு வரலாறு உதவுகின்றது. அதனால் வரலாற்றின் பெறுமதி வாய்ந்ததாக அமைகின்றது.

மொழி ரீதியாகப் பல்வேறு தாக்கங்களுக்கு ஆட்பட்ட நம்மவர்கள், தமிழர்கள் மொழியுரிமைக்காகப் பல போராட்டங்களில் ஈடுபட்டமை வரலாறு அவற்றிலேயொன்றாகக் கோடீஸ்வரன் மொழி வழக்கு இடம்பெற்றுள்ளது. கோடீஸ்வரன் என்ற தனியொருவர் சம்பந்தப்பட்டதல்ல அவ்வழக்கு. இலங்கைத் தமிழர்களை மட்டுமல்ல, உலகத்தமிழர்களையும் பிறநாட்டின் உரிமைக்காகப் போராடிய சிறுபான்மையினத்தவரையும் ஈர்த்தெடுத்தது அது.

இந் நாட்டில் 1956 இல் தனிச்சிங்களச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் பலனாக சகல அரச அலுவலரும் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் இன்றேல் அரச சேவையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற விதி அமுலுக்குவந்தது. தமிழ் அரச அலுவரையும் உள்ளடக்கிய நாட்டின் பெரும்பான்மை இனத் தவரை அதிகமாகக் கொண்ட தொழிற்சங்கங்கங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது மட்டுமல்ல பல புதிய தொழிற்சங்கங்களும் மொழிக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்கு உத்வேகம் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டன.

இந்நிலையில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய தமிழ் அலுவலர்கள் அவ்வத்துறைகளில் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகான மொழிவழி பிரிந்து மொழிவழித் தொழிற்சங்கங்களை நிறுவினர். அவ்வாறு 1960 காலத்தில் உருவாக்கப்பட்டதே அரசாங்க எழுது வினைஞர் சங்கம். அதன் முதற் தலைவராக க.சிவானந்தசுந்தரமும் பொதுச் செயலாயராக சி.பாலசுப்பிரமணியமும் தெரிவு செய்யப்பட்டனர்.

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவ அமைப்பான இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் அரச அலுவலர் சிங்களம் கற்கக்கூடாது என்று மன்னாரில் இடம் பெற்ற கட்சி மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது.

இவ்வாறிருந்த நிலையில் அரச சேவையிலிருந்த சிங்கள மொழித் தேர்ச்சி பெறாத தமிழ் அலுவலர்கள் சேவைநிரந்தரம், படிஉயர்வு, பதவியுயர்வு போன்றவற்றை இழந்ததுடன் தொழிலை இழக்கும் நிலைக்கும் உள்ளாகினர்.

இந்நிலையில் அன்று கேகாலை கச்சேரியில் எழுது வினைஞராகப் பணியாற்றிய செல்லையா கோடீஸ்வரன் அதற்கெதிராக வழக்குத் தொடுக்க முன்வந்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அதற்கு ஆதரவு வழங்கியதுடன் அக்கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர் முருகேசு திருச்செல்வம் வழக்காளி சார்பில் நீதிமன்றில் முன்னிலையானார்.

அக்காலத்தில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஆர்வத்தையும், உணர்ச்சியையும் தூண்டுவதாக அவ்வழக்கு இருந்தது. வழக்கை விசாரணை செய்த அன்றைய கேகாலை மாவட்ட நீதிபதி ஓ.எஸ்.டீ. கிரெஸ்டர் தனிச்
சிங்களச் சட்டம் அரசியலமைப்பின் 29ஆம் பிரிவின் படி செல்லாது என்று தீர்ப்பளித்ததுடன். சிங்கள மொழித்தேர்ச்சியின்மையைக் காரணம் காட்டி அரச ஊழியரைத் தண்டிக்க முடியாதென்றும் குறிப்பிட்டார்.

இத்தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் இலங்கை உயர் நீதிமன்றில் மேல்முறையீடு செய்தது. குறித்த மேன் முறையீட்டை விசாரணை செய்த நீதிமன்றம் அரசாங்க ஊழிரொருவர் அரசாங்கத்துக் கெதிராக வழக்குத் தொடுக்கும் உரிமையில்லை யென்று கூறி மாவட்டநீதிமன்றின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது. இவ்வாறிருந்த கால கட்டத்தில் 1965இல் டட்லி சேனாநாயக்க தலைமையிலான தேசிய அரசில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இணைந்து கோடீஸ்வரன் மொழிவழக்கைக் கொண்டுநடத்திய மு.திருச்செல்வம் அந்த அரசின் உள்ளூராட்சி அமைச்சரானர்.

அரசாங்க எழுது வினைஞர் சங்கம் இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிரித்தானியாவின் பிரிவுக் கவுன்ஸில் என்ற மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்தது. அரசாங்கம் மாவட்ட சபை தரப்போகின்றது. அதற்கு நல்லெண்ண அடிப்படையில் மொழிவழக்கை மீளப்பெறுமாறு அரசாங்க எழுது வினைஞர் சங்கத்தை அமைச்சர் மு.திருச்செல்வமும், தமிழரசுக் கட்சியினரும் நிர்ப்பந்தித்தனர் என்றே கூறலாம். வழக்கைத் தொடர்ந்து கொண்டு சென்றால் தமது சட்ட ஆலோசனைகள் அரசாங்கத்திற்கே வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

சிம்பாவே நாட்டில் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பின் தமது கோரிக்கையை நியாயப்படுத்த கோடீஸ்வரன் மொழிவழக்கில் மாவட்ட நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பைத் தமக்கும் சாதகமாக அந்நாட்டு நீதிமன்றில் முன்வைத்த வரலாறும் உண்டு. இவ்வாறான அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று நல்லெண்ண அடிப்படையில் மீளப் பெறப்பட்டால் அது
நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்படுவதாகவே குறிப்பிடப்படும் என்று முன்னாள் ஊர்காவற்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி வ.நவரத்தினம் தெளிவாக எடுத்துக்கூறியும் தமது தமிழ் அரசியல் தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவில்லை. மாவட்ட சபை என்ற மாயமானைக் காட்டி மொழிவழக்கு திசை திருப்ப முயலப்பட்டது.

இருந்த போதிலும் தமிழ் மக்களின் ஆதரவுடனும், நிதியுதவியுடனும் ச.இரங்கநாதன் கியூசியின் தலைமையின் கீழ் மூத்த சட்டத்தரணிகள் சு.சர்வானந்தா, எல்.ஏ.டி.வில்லியம், மாணிக்க வாசகர் அண்டவூட், குரொசட் தம்பையா (யூனியர்) ஆகியோரின் வழிகாட்டுதலுடன் சட்டத்தரணி லூசியன் சிறில் பெரேராவால் வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டது. இக்கோடீஸ்வரன் மொழிவழக்கு லண்டன் பிரிவுக் கவுன்ஸிலில் விசாரணைக்கெடுத்துக் கொண்டபோது, பிரித்தானிய பிரபுக்கள் சபையின் அங்கத்தவர் சட்டமேதை சேர்.டிங்கிள்புட் கியூசி எதுவித கட்டணமும் பெறாது வாதாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லண்டன் பிரிவுக் கவுன்ஸிலின் தீர்ப்பானது அரசாங்க அலுவலர் அரசாங்கத்திற்கெதிராக வழிகாட்ட முடியாது என்ற இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்ததுடன் தனிச்சிங்கச் சட்டத்தின் செல்லுபடித் தன்மையை ஆராய்ந்து தீர்ப்பளிக்கும்படி இலங்கை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

காலம் கடத்தப்பட்ட இவ்வழக்கு 1972 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பால் கைவிடப்படும் நிலையேற்பட்டது. இலங்கை வரலாற்றில் தமிழர்கள் சார்பில் நடத்தப்பட்ட மொழியுரிமைக்கான அடிப்படை உரிமைப் போராட்டம் இவ்வழக்கு என்று கூறலாம்.

தமிழ்மொழியுரிமைப் போராட்டமாகக் கருதப்பட்ட இவ்வழக்கு பிரித்தானிய பிரிவுக்கவுன்ஸிலில் முன்வைக்கப்பட்ட காலகட்டத்தில் அன்றிருந்தே தேசிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஜே.ஆர்.ஜயவர்தன, யூ.பி.வன்னிநாயக்க, மு.திருச்செல்வம் ஆகிய மூவரைக் கொண்ட அமைச்சரவையை உப குழு தமிழ் அரச அலுவரின் மொழிப் பிரச்சினையை தீர்க்க விநோதமான முடிவு கண்டது.

1956 சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வருவதற்கு முன் சேவையில் இணைந்தவர்களைப் பழைய ஊழியர்களென்றும் அதன்பின் சேவையிலிணைந்தவர்களைப் புதிய ஊழியர்களென்றும் வகைப்படுத்தி புதிய ஊழியர்கள் மூன்றாண்டுகாலத்துக்குள் சிங்களமொழியில் தேர்ச்சி பெற வேண்டுமென்றும் தவறினால் எதுவித இழப்பீடுமின்றி சேவையில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் அக்குழு முடிவு செய்தது.

அதேபோல் பழைய ஊழியர்கள் சிங்களம் படித்து, தேர்ச்சி பெற்றால், படி, பதவி உயர்வுகளைப் பெறலாம் என்றும் ஆனால், அம்மொழியில் தேர்ச்சி பெறாததைக் காரணம் காட்டி பணியிலிருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்றும் அக்குழு முடிவெடுத்தது. அது நடைமுறைக்கும் வந்தது.

சிங்களத்தில் தேர்ச்சிபெறாத தமிழ் அரச அலுவலர்களுக்கு வழங்கப்படாத படி, பதவி உயர்வுகள் பின்னாளில் அமைச்சராக விருந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் முயற்சியால் பெற்றுக்கொடுக்கப்பட்டது. இந்திய அரசி தலையீட்டால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13 மற்றும் 16ஆம் திருத்தங்களின் படி தனிச்சிங்களச் சட்டம் நீக்கப்பட்டு சிங்களமும் தமிழும் இந்நாட்டின் தேசிய மற்றும் ஆட்சிமொழிகளாக்கப்பட்டமையால், தமிழ் அரச அலுவலர்கள் கட்டாய மொழித் தேர்விலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இன்று சிங்களவர் தமிழும், தமிழர் சிங்களமும் கற்றுத் தேர்ச்சியடை வேண்டுமென்ற விதி நடைமுறையிலுள்ளது. தனிமொழி எதேச்சதிகாரம் அகற்றப்பட்டுவிட்டது. இருசாராருக்கும் படி, பதவி உயர்வுகளுக்கு இருதேசிய மொழிகளிலும் தேர்வடைய வேண்டுமென்று விதி புகுத்தப்பட்டுள்ளது.

எது எவ்வாறிருப்பினும் அரசனை நம்பி புருசனைக் கைவிட்டு அவதிப்படும் அபலையின் நிலைக்கு தொடர்ந்தும் நாம் ஆளாகாதிருக்க வரலாற்று ரீதியான படிப்பினைகளைக் கோடீஸ்வரன் மொழிவழக்கும் அவ்வழக்கு எதிர்கொண்ட சம்பவங்களும் நமக்கு உணர்த்துகின்றன, சிந்திக்க வைக்கின்றன என்பதை அவ்வழக்கை நடத்திய அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக அக்காலத்தில் இருந்தவன் என்ற முறையில் எடுத்துக்கூறும் கடப்பாடு எனக்கு உண்டென நம்புகின்றேன். வரலாறு எமக்கு வழிகாட்டும் பாடமாக அமையட்டும்.

(தினக்குரல், மே 18)

Share This Post