சுவிசில் நான் கடந்தவை – 1

– கபிலன் சிவபாதம் –

வெளிநாட்டுத் தமிழன் என்ற முறையில் இந்த வாழ்க்கை முறையை எழுத வேண்டும் என்று ஆறு வருடங்களுக்கு மேலாக எழுதி வைத்துக்கொண்டே வந்தேன். வெளிநாட்டுக் கலாச்சாரத்தையும் தமிழ் கலாச்சாரத்தையும் ஓரிடத்தில் பார்த்து அதற்குள் வாழ்ந்தவன் என்ற முறையில் என்னை வெளிநாட்டுத் தமிழன் என அழைப்பதே சிறந்தாக இருக்கும். நான் எந்தக் கலாச்சாரத்திற்குள் வாழ்கின்றேன் என்று என்னால் உறுதியாக கூறமுடியவில்லை.

எல்லோரையும் போலவே இயற்கை என்னை 1982ஆம் ஆண்டு எனது பெற்றோர்களிற்கு மகனாக இந்தப் பூமிக்கு அனுப்பி வைத்தது. எனது ஏழாவது வயதில் நான் பிறந்த ஊரை விட்டு வெளியேறிவிட்டேன். சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் சில மாதங்கள் வசித்த பின்னர் எனது ஒன்பதாவது வயதில் சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்தேன். ஊரில் மூன்றாம் ஆண்டு வரை தமிழ் படசாலையில் படித்திருந்தேன். சுவிஸ் pநாட்டில் ஆறாம் ஆண்டு வரை தமிழ் கல்வி கற்றேன். தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், அன்றைய காலகட்டத்தில் எனது வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை போதாமையினால் நான் மட்டுமே தனியொருவனாக படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

காலப்போக்கில் அது எனக்கும் ஆசிரியர்களிற்கும் ஒருவித சலிப்பைத் தந்தது. அதன் விளைவு எனது தமிழ் கல்வியை அத்துடன் நிறுத்திக்கொண்டேன். எனது அனுபவங்களைத் தாண்டி எனது காதுகளால் கேட்ட விடயங்கள் ஏராளமானவை. அவைகளை நான் இங்கே எழுதவில்லை. காதுவழிச் செய்திகளிற்கான ஆதாரங்கள் என்னிடம் இல்லை. ஆதாரம் இல்லாமல் நான் எழுதுகின்றவை ஏனையவற்றின் உண்மைத் தன்மையைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்பதால் ஆதாரமற்ற கருத்துக்களைத் தவிர்த்துள்ளேன்.

இரு கலாச்சாரங்களிற்குள் வாழ்கின்ற பிள்ளைகளின் வலிகள், வேதனைகள், இழப்புகள் எப்படியிருக்கும் என்பதை இந்த புத்தகம் சிறுதுளியேனும் படம்பிடித்துக் காட்டும் என நம்புகின்றேன். தமிழ் இளையவர்கள் பற்றி ஊடகங்களில் வருகின்ற வன்முறைச் செய்திகளின் பின்னால் உள்ள உளவியலை இது புரிந்துகொள்ள உதவும். இதனுடன் அனைவரும் ஒத்துப்போக முடியாவிட்டாலும், இரண்டாம் தலைமுறையில் பலர் தங்களின் இளமைக் காலங்களை எனது அனுபவங்களின் மூலம் மீட்டுக்கொள்வார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.

இங்கே இரண்டாம் தலைமுறை என்பதை சம்பிரதாயத்திற்காகவே எழுதுகின்றேன். நான் முதலாம் தலைமுறைக்கும் இரண்டாம் தலைமுறைக்கும் இடைப்பட்ட இன்னொரு தலைமுறை. இலங்கையிலே பிறந்து, வளர்ந்து, வேறு தேசங்களில் உருவாகிய ஒரு தலைமுறை. முதலாவது தலைமுறையின் இளமைக்கால பருவங்களை அவர்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் போது ‘ஆ’ என்று வாயைப்பிளந்து எங்களுக்கு இப்படியான அனுபவங்கள் இல்லையே என ஏங்குவதைக் கேட்டிருக்கின்றேன்.

சினிமாவில் காட்டப்படுகின்ற கல்லூரிக்கால சுவாரஸ்யங்களும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இந்த தேசத்தில் எங்களின் இளமைப்பருவம் எப்படியிருந்திருக்கும் என்று அறிந்துகொள்ளும் ஆவல் அனைவருக்கும் இருந்திருக்கும். அந்த ஆவலைச் சிறிதேனும் பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றேன். காலனியாதிக்கவாதத்தால்
வடிவமைக்கப்பட்ட எனது அடிமைப்புத்தி வெள்ளைக்காரன் சொல்வதே புத்திசாலித்தனம் என நினைத்த எனது முதலாம் தலைமுறை குறித்து குறைத்தே மதிப்பிட்டிருந்தேன். ஒட்டுமொத்தமாக எங்களைப் பின்தங்கிய ஒரு இனமாகவே பார்த்துக்கொண்டிருந்தேன்.

இது ஒரு வகையில் ஊடகங்களின் பாதிப்பே. இதிலிருந்து மீண்டு வருவதற்குள் பாதி வாழ்க்கை ஓடிவிட்டது. நான் வாழுகின்ற நாட்டில் தமிழ் இனத்திற்கென நற்பெயர் ஒன்று இருக்கின்றதென்றால் அது எங்கள் பெற்றோர்களின் கடின உழைப்பேயன்றி வேறொன்றுமில்லை. இன்றைய தலைமுறையில் உள்ளவர்கள் எனது அப்பாவின் தலைமுறையினரை நக்கலடிப்பதை அவ்வப்போது கண்டுவந்திருக்கின்றேன். அவர்கள் நாகரீகமடையாதவர்கள் என்ற தோரணையில் அந்தக் கிண்டல்கள் இருக்கும். நான் பார்த்து வியக்கின்ற மனிதர்களில் முக்கியமானவர்கள் முதலாம் தலைமுறையினர்.

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை என்னால் வாழ முடியுமா…என்றால் முடியாது. ஏதுமற்ற ஒன்றிலிருந்து ஒரு வாழ்க்கையைக் கட்டியமைப்பதற்குப் பல தியாகங்கள் தேவைப்படுகின்றது. அவர்கள் அதிகமாகவே தியாகம் செய்திருக்கின்றார்கள்.
இப்பொழுது உள்ள விஞ்ஞான வசதிகளுடன் உலகத்தின் எந்த ஒரு மூலைக்கும் இலவசமாகத் தொடர்புகொள்ள முடியும். அவர்களின் காலத்தில் ஊரில் உள்ள குடும்பத்தினரின் நிலைபற்றி அறிய ஏற்படுத்தும் தொலைபேசி அழைப்புக்களே சம்பளத்தில் பாதியை விழுங்கிவிடும். அவர்கள் மனதிற்கினியவர்களின் குரல்களை கேட்பதற்காகவே தவமிருந்தார்கள் என்று எனது தலைமுறைக்குச் சொன்னால் சிரிப்பார்கள்.

புலம்பெயர் தேசத்தில் எனது வாழ்க்கையை எப்பொழுதும் அழகாக்கி, அலங்கரித்துக்கொண்டு இறுதிவரை இந்த புத்தகத்தில் என்னுடன் பயணிக்கும் எனது நண்பனிற்கும், அரசியல் கருத்துக்களில் மாறுபாடு இருந்தாலும் முகநூலிலும் இணையங்களிலும் எனது எழுத்துக்களைப் பார்த்து என்னைத் தொடர்ந்து எழுதுமாறு உற்சாகமளித்த அந்த நாலு உள்ளங்களுக்கும் நன்றி. சில சமயங்களில் இந்த நாட்டில் மரங்களின் கீழ் அமர்ந்திருந்த வேளைகளில் கூட எனக்குத் தமிழ் கற்றுத்தந்த ஆசிரியர்கள் உள்ளார்கள். அவர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றேன்.

உயிர் கொடுத்து, உடலும் கொடுத்து வாழ்க்கை முழுவதும் என்னைத் தாங்கிப்பிடித்த எனது பெற்றோர்களுக்குத் தலை வணங்குகிறேன்!எங்களுக்கு எப்பொழுதும் வழிகாட்டி நின்றவர் என்று நான் நம்பிய தலைவனையும் அஞ்சலித்து எனது பயணத்தை தொடர்கின்றேன்!
*

Share This Post