செயற்பாடுகள்

ந.முரளிதரன்

அறிக்கை விரிந்து கிடக்கிறது
அதன் ஒவ்வொரு சொற்களும்
போவோர் வருவோர்
அனைவரையும்
விழித்துப் பார்க்கிறது
எழுதியவர்கள் அதனை
மறந்து போயிருந்தனர்
ஒப்பம் இட்டோர்
மறுதலை நிலைப்பாட்டுக்கு
வந்திருக்கலாம்

அத்துமீறலுக்கும்
அடக்குமுறைக்கும்
சுரண்டலுக்கும் எதிராக
எவ்வளவு சொல்லாடல்களை
உதிர்த்திருப்போம்

போராளிகளாய்
எழுத்தர்களாய்
உரைஞர்களாய்
விமர்சகர்களாய்
நாடகர்களாய்
மறுத்தோடிகளாய்
எங்களை வரித்துக்கொள்வதில்
எவ்வளவு வாஞ்சையோடிருந்தோம்

வரலாறு குத்துக்கரணம் அடித்து
எமது பிடரியில்
அறைந்து உலுக்குகிறது

ஆனாலும் தொடர்ச்சியான
எமது போராட்டத்தின்
ஒரு படிக்கட்டமாக
“இது” என்று ஓங்கியுரைத்து
மனிதனின் உச்சந்தலையில்
சம்மட்டி அடி போட்டு
குருதி கொப்பளித்துப்
பாய்வதைக்
கண்டு குதூகலிக்கிறது
எம் மனம்

செயற்பாட்டாளர்கள் …
நீங்கள் அனைவரும்
தேடிக்கொண்டிருக்கிறீர்களா ?
தத்துவம் தெரியாத
சிந்தாந்தம் புரியாத
அந்த எளிய மனிதர்களை
நீங்கள் கண்டுகொள்ளப் போவதில்லை

அவர்கள் வீதிகளிலும்
குடிசைகளிலும்
தோட்டங்களிலும்
வேலைத்தலங்களிலும்
சிறைகளிலும் என்று..
இன்னும் இன்னும்
எல்லா இடங்களிலும்
செயற்பட்டபடி…!

அவர்கள் அறிக்கை எழுதுவதில்லை
தீர்மானம் முன்மொழிவதில்லை
மாநாட்டில் உரைப்பதில்லை

ஆனாலும் அவர்களது
பிணங்கள் கூட
செயற்பாட்டாளர்கள்தாம்!

Share This Post