சுவிசில் நான் கடந்தவை – 2


– கபிலன் சிவபாதம் –

சுவிற்சர்லாந்து  (Switzerland) அல்லது சுவிஸ் என்ற நாடு தாழ்ந்த நிலப்பகுதிகளாலும், ஆல்ப்ஸ் மலைத்தொடராலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடாகும். இதன் வடக்கே ஜேர்மனி, மேற்கே பிரான்ஸ், தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லிக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. சுவிற்சர்லாந்து வரலாற்று நோக்கில் ஒரு கூட்டாட்சியைத் தழுவிக்கொண்ட நாடு! 1848 ம் ஆண்டு முதல் கன்ரோன்கள் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது.

41,285 சதுர கிமீ பரப்பளவில் தோராயமாக 8 மில்லியன் மக்கள் தொகையைக் (2015) கொண்ட நாடு. இது மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது பரப்பளவில் 136ம் இடத்தில் உள்ளதுடன் இந்நாட்டின் நீர்ப்பரப்பு நிலப்பரப்புடன் ஒப்பிடும் பொழுது 4.2 சதவீதமாகவும் உள்ளது.சுவிற்சர்லாந்து 26 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி குடியரசாகும்.

கூட்டாட்சியின் அதிகாரத் தலைமையிடமாக பேர்ண் நகரமும் நாட்டின் பொருளாதார மையங்களாக  உலகளாவிய நகரங்களான ஜெனீவாவும், சூரிச்சும் திகழ்கின்றன. சுவிற்சர்லாந்து 

தனிநபருக்கான வருமானக் கணிப்பீட்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக உள்ளது.சுவிற்சர்லாந்தின்நடுநிலைக் கொள்கை நீண்ட  வரலாற்றினைக் கொண்டதாகும். 1815 ம் ஆண்டிலிருந்து சுவிஸ்  சர்வதேச அளவில் எந்த போரிலும் பங்கெடுத்திருக்கவில்லை.

உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக் கொண்ட வரலாற்றுனைக் கொண்ட நாடாக சுவிற்சர்லாந்து  விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் உலகிலேயே நாட்டின்  அதிபருக்கு ஒரேயொரு ஆண்டு பதவிக்காலம் கொண்ட நாடு இது மட்டுமே!

ஜேர்மன் (டொச் மொழி என்றும் அழைப்பார்கள்), பிரெஞ்சு, இத்தாலி மற்றும் றேத்தோரொமனிஸ் (Rätoromanisch) ஆகிய நான்கு தேசிய மொழிகள் கொண்ட நாடு சுவிஸ்!

போரின் காரணமாக எந்த நேரமும் இறக்கலாம் என்ற பயத்தில் சொந்த நாட்டைவிட்டு வெளியேறுவது, இன்னொரு நாட்டில் நல்ல வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையில். பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில் பணம் சம்பாதிப்பதை தவிர வேறெந்த நோக்கத்தில் அவர்கள் குடியேறியிருக்க முடியும்?

இந்த எதிர்பார்ப்புகளுடன் இடம்பெயர்ந்து அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்ற எந்தத் திட்டமும் இல்லாமல் வந்த எனது அப்பாவின் வயதையொத்தவர்களிற்கு காத்திருந்தது என்னவோ ஏமாற்றம் மாத்திரமே. அவர்களுக்கு முதலாவது தடைக்கல்லாக இந்த நாட்டு மொழி இருந்தது.

ஆங்கிலமும் அவர்களிற்கு சரளமாகத் தெரிந்திருக்கவில்லை. உலகப் பொது மொழியான சைகை மொழியே கைகொடுத்தது. பலசரக்குக் கடைகளில் கோழி வாங்கச் சென்றவர்கள் முட்டையைக் காட்டி “மதர்” எங்கே என்று கட்டைவிரலை உயர்த்திக் காட்டியிருக்கிறார்கள். அல்லது “கொக்கரக்கோ” என்று கத்திக் கேட்டிருக்கின்றார்கள்.

அவர்களின் வாயிற்குள் நுழையாத இந்நாட்டு ஊர் பெயர்கள் எல்லாம் தமிழாக்கம் பெற்றன. சிந்தழகி (Schindellegi), எசக்கபுசக்கே (Herzogenbuchsee), சுவாமிலிங்கன் (Schwamendingen) அல்லது புக்கைபிளச் (Bucheggplatz) என்று தங்களின் வசதிக்கேற்ப மாற்றிக்கொண்டார்கள்.

ஊரிலிருந்து வெளியேறும் போது அங்கிருந்த சொத்துக்களை விற்றோ அல்லது கடன் வாங்கியோ வெளியேறியவர்களே எனது அப்பாவின் தலைமுறை. வெளிநாடு வந்ததும் அந்தக் கடனை அடைப்பதே அவர்களின் முதற் குறிக்கோளாக இருந்தது. அதே நேரத்தில் அவர்கள் விட்டுவிட்டு வந்த குடும்பத்தின் பொருளாதாரத்தையும் சுமக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். அவர்களின் தேவைகள் அனைத்தும் பணத்தைச் சுற்றியதாகவே இருந்தது. குடியேறிய நாட்டில் மொழியறிவு இல்லாமல் பணம் சம்பாதிப்பதென்பது அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை இன்னும் சிக்கலாக்கியது. குடியேறிய நாடு தனது மொழியை முதலில் படித்து தங்களுடன் ஒத்து வாழு என்றது. குடியேறிய நாட்டிற்கும் அவர்களிற்குமான முதல் முரண்பாடு இதுவே.

பதின்ம பருவத்தில் இங்கு வந்து கல்வி கற்க விரும்பியவர்களை நான் சந்தித்திருக்கின்றேன். அவர்களின் பொருளாதாரச் சூழல் அன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு இடம்கொடுக்கவில்லை. அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச கல்விக்கான வயதினை இங்கு வந்து சேரும் போது கடந்திருந்தார்கள். மேற்கொண்டு தொழிற்கல்வி படிப்பதாக இருந்தால் அதற்கு அவர்கள் சொந்தமாகப் பணம் கட்டியே படிக்கவேண்டியிருந்தது.

இந்நாட்டு கல்வி முறையை தமிழ் பெற்றோர்கள் ஏனைய நாட்டில் வாழும் தங்கள் உறவினர்களது பிள்ளைகளின் கல்விமுறையுடன் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தன் விளைவு எனது தலைமுறைக்கு பெரும் தலையிடியாக அமைந்தது. ஊரில் இருந்த கல்வி முறைக்குப் பழக்கப்பட்டவர்களிற்கு இந்நாட்டு கல்விமுறையைப் புரிய வைப்பதென்பது பெரும் சிக்கலாக இருந்தது. ஏன் எனக்கே அது முழுவதுமாக புரிந்திருக்கவில்லை.

சுவிஸ் நாட்டு கல்விமுறை என்பது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் தனித்துவமானது. இங்கே அடிப்படைக் கல்வி என்பது அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. 12-13வயது வரை அனைத்து மாணவர்களிற்கும் அடிப்படைக் கல்வி ஒன்றே (Primarschule). அதன் பின்னர் அவர்களது கல்வி கற்கும் திறனிற்கு ஏற்ப (அறிவிற்கு ஏற்பவல்ல) 3 அல்லது 4 வகைகளாகும் ,மாநிலங்களை பொறுத்துப் பிரித்து விடுவார்கள்

 (1. Gymnasium, 2. Sekundarschule, 3. Realschule, 4. Werkschule). 

சில மாநிலங்களில் இதன் பெயர்கள் மாறுபடும்

நான்காவது பிரிவில் கல்வியில் பலவீனமானவர்களை இணைத்துவிடுவார்கள். பயிற்றப்படும் பாடங்கள் அனைத்து பிரிவினர்க்கும் ஒன்றாக இருந்தாலும் அதன் ஆழம் வேறுபட்டதாக இருக்கும். முதலாவது பிரிவிற்குச் சென்ற பிள்ளைகளை தமிழ்ச்சமூகமும் பெற்றோர்களும் அறிவாளிகளாக கொண்டாடினர். ஏனையவர்களை அந்தந்த பிரிவிற்கு ஏற்றாற்போல் கையாண்டனர். 90களில் முதலாவது பிரிவில் படித்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகவும் ஒரு அரிய வகையினராக இருந்தனர்.

மூன்றாண்டுகள் இந்தப் பிரிவினை நீடிக்கும். கீழ் பிரிவில் உள்ளவர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் சிறப்பாக படித்தால் அவர்களிற்கு ஒரு பிரிவு மேலே செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். இந்த பிரிவுகளில் முதலாவது பிரிவில் படித்து முடித்ததும் தொழிற்கல்வியோ அல்லது பல்கலைக்கழகமோ செல்வதற்கான அனுமதி கிடைத்துவிடும். ஏனைய பிரிவில் உள்ளவர்களிற்கு தொழிற்கல்வி பயில்வதற்கான அனுமதி மாத்திரமே வழங்கப்படும்.

இந்த தொழிற்கல்வி முறையை முதலில் விளக்கிவிடுகின்றேன்.

Share This Post