நடுகல் நாட்டப்பட்டிருக்கிறது!

இன்று எனக்கு
எந்த ஓட்டமும் கிடைக்கவில்லை
எனது தொலைபேசி
மணி ஒலிக்கவுமில்லை
ஓட்டம் கேட்டு
எந்தக் குறுஞ்செய்தியையும்
யாரும்
எனக்கு அனுப்பியிருக்கவில்லை

ஓட்டம் கிடைக்கும் போதெல்லாம்
பயணிக்கும் மனிதர்களோடு
அளவளாவும்
தருணங்கள் தோறும்
எனது மகனின் கதையைச்
சொல்லுகிறேன்

கல்லறைக்குச் சென்று
அவனை வழிபட்ட
ஆத்மார்த்தம்
அதனால் கிடைக்கிறது

பிரிவுத்துயரத்தினால்
நள்ளிரவில்
நான் எழுப்பிய கதறல்கள்
எனக்கு அளித்த விடுதலையை
அந்த உரையாடல்களும்
அளிப்பதாகச் சொன்னால்
யார்தான் நம்புவார்கள் ?

என்னிடம் ஓர் நாள்
நீ
மீண்டும்
உயிர்த்தெழுந்து வருவாய்
என நான்
நம்பிக்கொண்டிருப்பதை
யார்தான் நம்புவார் ?

எங்கும் எதிலும்
உன்னை நான்
காண்பதை
யார்தான் உணர்வார் ?

உன் முகத்திலிருந்து
வழிந்து விழும்
புன்முறுவலை
இறுகப்பற்றியபடி
நான் எழுந்திருக்க
முயன்றிருக்கின்றேன்

உன் நினைவுகளைப் பற்றியபடி
என்னவோ எல்லாம்
செய்ய முயன்றிருக்கின்றேன்

உன்னை எரிக்க மனம் ஒவ்வாது
புதைத்திருக்கின்றேன்
அந்தப் புதைகுழியில்
நடுகல் நாட்டப்பட்டிருக்கிறது

நீ படித்த பாடசாலையில்
நீ வென்ற பதக்கங்களும்
உனது ஞாபகார்த்தமாக
நீ அணிந்த
விளையாட்டுச் சீருடையின்
மாதிரியும்
சட்டக வடிவப் பெட்டியூடு
தொங்குவதை
எவ்வளவு நேரமும்
என்னால் அண்ணாந்து
பார்த்துக் கொண்டிருக்கலாம்

உன்னைப் பறைசாற்றும்
அந்தப் பூங்கா
அது குறித்து மக்கள்
சிலாகிக்கும் வேளைகள்
எனைச் சான்றோன்
எனக் கேட்ட தாய் போல் ஆக்கிற்று

-ந.முரளிதரன்-

Share This Post

Post Comment