சுவிசில் நான் கடந்தவை – 3

-கபிலன் சிவபாதம்-

அடிப்படைக் கல்வி முடிவுற்றதும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் (படிக்கவிருக்கின்ற தொழிலைப் பொறுத்தது) தொழிற்கல்வியைத் தொடர முடியும். யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிற்கல்வியையும் படிக்க முடியும் என்ற போதிலும் சமூகத்தில் கெளரவ தொழில்களான அலுவலக வேலைகளிற்கு படித்தவர்களையே அந்தந்த நிறுவனங்கள் தெரிவுசெய்வது எழுதப்படாத ஒரு சட்டமாக உலாவந்தது.

தொழிற்கல்வி பயில்பவர்களிற்கு அந்தந்த தொழிலைப் பொறுத்து 1-2 நாட்கள் பாடசாலையில் அந்த தொழிலிற்கு தேவையானவற்றைப் படிப்பிப்பார்கள். ஏனைய நாட்கள் அவர்கள் தங்களின் நிறுவனத்தில் வேலை கற்க வேண்டும். இவர்களிற்கு அடையாளமாக ஒரு சிறிய தொகை சம்பளம் கொடுக்கப்படும். தொழிற்கல்வி முடிந்ததும் விரும்பினால் மேற்கொண்டு படித்து பல்கலைக்கழகமோ அல்லது  கல்லூரிகளிற்கோ செல்ல முடியும். இந்நாட்டை பொறுத்தவரை படிப்பதற்கான சந்தர்ப்பங்கள் எப்பொழுதுமே இருந்துகொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் நாம் சொந்தமாக செலவு செய்தே படிக்க வேண்டும்.

நான் படிப்பில் எந்த பிரிவு என்று சொல்லவேயில்லை என்ற உங்களின் சந்தேகத்தை என்னால் உணர முடிகிறது. இந்தக் கேள்விக்கான பதில் உங்களிற்கு நிச்சயமாக ஏதாவது ஒரு பக்கத்தில் கிடைக்கும். கவலை வேண்டாம். நீங்கள் நினைப்பதுதான் நடந்தது.

எனது அப்பா 80களின் நடுப்பகுதியில் அம்மா, நான், மற்றும் எனது உடன்பிறந்தவர்கள் என்று அனைவரையும் விட்டு வெளியேறினார். நானும் எனது தம்பியும் அவரின் முகத்தைப் புகைப்படங்களில் தான் பார்த்திருக்கின்றோம்.

83ஆம் ஆண்டு இனக்கலவரத்தை தொடர்ந்து எனது அப்பாவுடன் வெளியேறியவர்கள் ஏராளம். முதலில் சவுதியில் சில வருடங்கள் வாழ்ந்து பின்னர் அன்றைய ஜேர்மனியில் குடியேறி, இறுதியாக சுவிஸ் நாட்டிக்குள் நுழைந்தார். 

இங்கு வந்தவுடன் வேலை செய்து பணம் சம்பாதித்து ஊரிற்கு அனுப்பலாம் என்பதே அவரைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. மொழி தெரியாததால் கிடைக்கின்ற சிறிய வேலைகளை செய்தே காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தார். அப்படி கிடைக்கின்ற பணத்தில் அவர்களின் வாழ்க்கைச் செலவையும் பார்த்து குடும்பத்தையும்  பார்க்க வேண்டியிருந்தது.

சுவிஸ் நாடு அன்னளவாக இப்பொழுது 50,000 தமிழர்களைக் கொண்ட நாடு. உலக வரைபடத்தில் ஒரு கைகுட்டை அளவுதான். பரப்பளவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழர்களின் எண்ணிக்கை ஏனைய புலம்பெயர் நாடுகளை விட அதிகம். இப்பொழுது தமிழர்கள் இல்லாத கிராமங்களே இல்லையெனலாம். எங்களது அப்பாக்கள் வந்த காலங்களில் அண்டைய மாநிலங்களில் தமிழர்கள் வசிக்கின்றார்களா என்பதுகூட அவர்களிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அகதி வாழ்க்கையில் அவர்களுக்கு இரண்டே இரண்டு தெரிவுகளைதவிர வேறு தெரிவுகள் இருக்கவில்லை. சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்வது அல்லது வந்த நாட்டில் என்ன விலை கொடுத்தாகினும் உயிர்வாழ்வது. இங்கு வாழ்கின்ற முதலாவது சந்ததியினர் அனைவரின் கதையும் இப்படியானதாகத்தான் இருக்கும்.

“கேம்ப் வீடு” என்பது நான் இங்கு வந்த புதிதில் நடைமுறையில் இருந்த ஒரு சொல். இன்று இந்தச் சொல் பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. “கேம்ப் வீடு” என்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் பழைய வீடுகள் சிலவற்றை ஒதுக்கி அங்கே அகதிகளாக வந்தவர்களைக் குடியேற்றிவிடுவார்கள். ஒரு அறையில் ஐந்து பேர்கள் வரை தங்க வேண்டியும் இருந்தது. தனிமை என்பது அரிதாகிப்போனது.

இப்படி ஆரம்பகாலங்களில் வந்தவர்களிற்கு இப்பொழுது எனது வயதில் பிள்ளைகள் இருந்தாலும் அவர்களையும் எனது நட்புவட்டத்திற்குள் வைத்துக்கொண்டேன். அவர்களிடம் பழைய கதைகள் கேட்பது மிகவும் சுவாரசியமானது.

“எங்கடை கேம்ப் வீட்டில் இரண்டு பேர் இருந்தவங்கள். ரெண்டு பேரும் ஒரே றூம் வேற. நாங்கள் வாடா போடா நாயே பேயே எண்டு ஒருத்தரை ஒருத்தர் கூப்பிட்டாலும் அவங்கள் மட்டும் மாறிமாறித் தங்களுக்குள்ளை வாங்கோ போங்கோ எண்டுதான் கதைப்பாங்கள். எங்களுக்கு இலேசாகச் சந்தேகம் வர தொடங்கீற்றுது. கோதாரி விழுவார்…சில நேரம் குண்டியில தட்டிட்டுப் போவாங்கள். ஒருக்கா கிஸ் பண்ணுறதைக் கண்டிட்டம். அதோட “அவங்கள்” தான் என்பதை முடிவு செஞ்சிட்டம்.”அந்த இருவருக்கும் இப்பொழுது திருமணமாகி பிள்ளைகள் இருக்கின்றன. இந்தக் கதை தெரிந்ததிலிருந்து அவர்களைச் சேர்த்து எங்காவது காணும் போது என்னையறியாமலே ஒரு வேறு விதமான பார்வை அவர்கள் மேல் வரும். அவர்கள் இப்பொழுதும் “வாங்கோ போங்கோ” என்று தான் பேசிக்கொள்கிறார்கள்.

இளைஞர்களிற்கே உரிய அனைத்து உணர்ச்சிகளும் அவர்களிற்கும் இருந்திருந்தது. சிகப்பு விளக்குப் பகுதிகளிற்கு அவ்வப்போது போய் வந்து கொண்டிருந்தார்கள். அதை ஒரு கொண்டாட்டம் போல் பஸ் பிடித்து வேறு மாநிலங்களிற்குச் சென்று கொண்டாடினார்கள். இப்படி வேறு மாநிலங்களிற்கு செல்வது ஒரு பாதுகாப்பிற்காகவே. அங்கே அவர்களைத் தெரிந்தவர்கள் யாராவது இருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு.

நான் வேறு மாநிலங்களில் வேலை செய்த போது அந்த வழியாகப் போகும்போதெல்லாம் என் முகத்தில் தமிழ் சாயல் தெரிந்ததும் யன்னலருகில் நின்று அந்த அழகிகள் “50ரூபாய்”…”100ரூபாய்” என்று பார்த்துச் சிரிப்பார்கள். வேறு நாடுகள் போல் இப்படியான சிகப்பு விளக்கு பகுதிகள் எங்காவது ஒரு நகர்ப்புறத்தில் இருப்பதில்லை. நகரின் மையப்பகுதியில் தான் இயங்கிக்கொண்டிருந்தன.

இப்படிப் போன இடங்களில் காதலில் விழுந்தவர்களும் உண்டு. அப்படி ஒருவரிற்கு கொலாம்பியா நாட்டுப் பெண்ணுடன் காதல் மலர்ந்துவிட்டது. நண்பர்கள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. அந்த பெண்ணின் வதிவிட அனுமதி முடிந்ததும் தனது நாட்டிற்கு சென்றுவிட்டாள். அந்த அண்ணனிற்கு தமிழ் பெண்ணுடன் திருமணமாகிவிட்டது. ஆனால் கொலம்பியாவிலும் நம் இனத்தை அந்த அண்ணன் விதைத்து விட்டிருந்தார். அவரிற்கு அங்கு ஒரு மகன் இருக்கின்றார்.

“பாத்தியாடா எங்கடை இனத்தை எவனாலையும் அழிக்கமுடியாதபடி பரப்பிவிட்டிருக்கிறம்” என்று இந்தக் கதையை உதாரணம் காட்டி அடிக்கடி சிரித்துக்கொள்வோம்.

இன்னொரு அண்ணனை எனது இளமைபருவத்தில் சந்தித்தேன். அப்பொழுது அவரிற்கு திருமணமாயிருக்கவில்லை. ஒரு திருநங்கையின் நிரந்தர வாடிக்கையாளர் அவர். அவரிற்கு அந்த அழகி திருநங்கையென்பதை விட அந்தப் பெண் தமிழ் பேசுவார் என்பது திருப்பதிகரமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அவர் அந்த வீட்டிற்கு போகும் போது தமிழ் சாப்பாடு செய்துகொண்டு போவார். தமிழ் பேசுகின்ற அந்த சிங்கப்பூர் அழகிக்கு பிடித்தமான தோசையை ஒரு பார்சல் கட்டிக்கொண்டு காரில் புறப்படுவார். இப்பொழுது அவரிற்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவ்வப்போது அவரைக் காணுகிற வேளைகளில் “தோசைக்காரா நண்பா” என்று கூப்பிடும் போது “அதொரு பொற்காலம்” என்று பெருமூச்சு விடுவார்.

கேம்ப் வீடுகளிற்கிடையில் குழு மோதல்கள், சாதிச் சண்டைகள் எனப் பலவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

மொழி தெரியாததால் எனது அப்பா போன்றவர்களிற்கு  இந்நாட்டவர்களுடன் தொடர்பைப் பேணுவது இலகுவாக இருக்கவில்லை. எனவே தமிழர்களிற்குள்ளேயே சுற்றி வரவேண்டியிருந்தது. ஒரு வகையான பிக் பிறதர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தான்.

எனது அம்மாவோ தனியொரு பெண்ணாக அவரின் சகோதரர்களின் உதவியுடன் எங்களை வளர்க்க வேண்டியிருந்தது. கணவன் இல்லாமல் தனியயொரு பெண்ணாக வாழ்க்கையைக் கொண்டுசெல்வதென்பது அவர்களின் காலத்தில் ஒரு சவாலாகவே இருந்தது. அவர்களின் ஒழுக்கத்தில் எந்நேரமும் கல் எறிவதற்கு தமிழ் சமூகம் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டே இருந்தது.

அப்பாவிற்கும் எனக்குமான தொடர்பு எனது ஒன்பதாவது வயதில்தான் ஆரம்பமானது.

“என்ட செல்லம் எல்லே நீ என்டாலும் என்னோட நில்லன்” என்று அம்மம்மா அழாத குறையாக்க் கேட்டாள். என்னைத் தடுத்து நிறுத்தி விடுவார்களோ என்ற பயத்தில் நான் அந்த இடத்திலேயே மணலில் விழுந்து அழுது கொண்டே அங்குமிங்கும் உருண்டுகொண்டிருந்தேன். இது எனக்கு முதல் முறையல்ல. இப்படி விழுந்து புரள்வது எனக்கு கைவந்த கலை. இதானலயே என்னை ராங்கி பிடித்தவன் என்றார்கள்.

இந்த ராங்கித்தனத்தை மனிதர் மிருகம் என்ற வேறுபாடின்றி அனைவரிடமும் காட்டியிருக்கின்றேன். 

ஒரு நாள் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது சிவனே என்று தெருவிற் படுத்திருந்த நாய் குரைக்க அதற்கு கல்லால் எறிய அது துரத்திக்கொண்டு வந்து காலைப் பதம் பார்த்தது. அதற்கு பிறகு நாய் என்றாலே கொஞ்சம் பயம். 

வீட்டிற்கு வந்தவர்கள் விடைபெற்று கலைந்து செல்ல நடு ராத்திரி ஆகியிருந்தது. எப்படி எங்கே தூங்கிப் போனேன் என்று எனக்கு நினைவில் இல்லை.

“டேய் எழும்புங்கோ” சேவல் கூவ முதலே அம்மம்மா விழித்துக் கொள்வார். அவவுக்கு சரியாக எத்தனை வயது என்று தெரியவில்லை. ஆனால் அந்த வயதிலும் ஒரு சிறுமியை போல் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருப்பார். அக்கம் பக்கத்திலிருந்த சேவல்களுக்கு அவவின்  மீது ஒரு கோபம் இருந்திருக்க வேண்டும். தாங்கள் கூவ முதலே ஒருத்தி எழும்பி விடுகிறாள் என்றால் இது எந்த விதத்தில் நியாயம் என அவை நினைத்திருக்கலாம்.

ஊரில் அனைவராலும் ஓட்டைப்பல்லன் என்றே நக்கலாக அழைக்கப்பட்டவன் நான். இந்த பட்டப் பெயரிற்குப் பின்னால் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் உண்டு. மழை நாளொன்றில் வீட்டிற்குப் பின்னால் கட்டி வைத்திருந்த கக்கூஸ் கிடங்கிற்குள் சறுக்கி விழுந்ததிலிருந்து எனது பற்கள் நேர் வரிசையாக இருப்பதில்லை. அதனால் இடையிடையே பற்களின் வரிசையில் ஓட்டைகள் இருந்தன. ஒரு முறை பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில் என்னுடன்  படித்த ஒருத்தி என்னை ஓட்டைப் பல்லன் என்று அழைக்க, நான் அவளைத் தள்ளிவிட, அவள் கீழே விழவும் அவளின் பற்களிலிருந்து ரத்தம் வரவும் சரியாக இருந்தது. அன்று மதியமே எனது வீட்டில் கூட்டம் கூடி விட்டது. அவளின் வீட்டார்கள், சொந்தக்காரர்கள் என்று என்னைத்தேடி வந்திருந்தனர். அவளின் தந்தை எனக்கு அடிக்கப் போவதாக ஒற்றைக்காலில் நின்றார்.

“அவளை ஏன்டா தள்ளி விழுத்தினி” என்று எல்லோரும் கேட்க நான் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். உண்மையைச் சொல்ல எனக்கு வெட்கமாக இருந்தது. என்னை நானே ஓட்டைப்பல்லன் என்று சொல்லக் கூச்சமாக இருந்தது.

அப்பொழுது கூட்டத்திலிருந்து  “டேய் அவள் உன்ர சாதியை சொல்லிப் பழிச்சதாலயே நீ அவளைத் தள்ளிவிட்டனி” என்று ஒரு புண்ணியவான் எடுத்துக்கொடுக்க, சாதி என்றால் என்ன என்றே தெரியாத நான் “ஓம்” என்று தலையாட்டி வைத்தேன். அப்புறம் என்ன…அது ஒரு சாதிப் பிரச்சினை போல் விஸ்வரூபம் எடுக்க, எனது சொந்தக்காரர்களிடம் நான் ஒரு ஹிரோவாக உருவெடுத்தேன்.

Sent from my iPhone

Share This Post