முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குமுறுகிறார் !

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின்; “ரிஷாட் பதியுதீன்” போன்றவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்து தனது முக நூலில் பதிவொன்றினை இவ்வாறு இட்டுள்ளார்!
இஸ்லாம் வீரத்தின் மார்க்கம், இஸ்லாம் உண்மையின் மார்க்கம், இஸ்லாம் நீதியின் மார்க்கம், இஸ்லாம் இயற்கை மார்க்கம் என்றெல்லாம் வாய்கிழியப் பேசுகின்ற எம்மவர்கள் பலர் அதை ஒருபோதும் நடைமுறையில் வெளிப்படுத்துவது கிடையாது. உதட்டளவிலான மார்க்கத்தின் சொந்தக்காரர்களால் உருப்படியாக எதனையும் சாதிக்க முடியாது. அவர்கள் இந்த மார்க்கத்தையும், அதனடியாக அடையாளப்படுத்தப்படும் ஒரு சமூகத்தையும் குட்டிச்சுவராக்கி அதனைப்பயன்படுத்தி தமது சுய இலாபங்களை அடைந்துகொள்வதையே இலக்காகக் கொண்டிருப்பர்.
தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதற்காக நஞ்சுப்போத்தலைக் கையில் எடுத்தவன்; தனக்கு அமைச்சுப்பதவி தேவை என்பதற்காக ஒரு கட்சியையும், அதன் தலைமையையும் காட்டியும் கூட்டியும் கொடுத்த ஒருவன்; அதே வழியில் தனக்கு அமைச்சுப்பதவி வேண்டும் என்கின்றபோது ஒரு சமூகத்தையே பழியிடத்தயங்கமாட்டான் என்பதை மறுப்பதற்கில்லை. இப்படி நாம் கூறுகின்றபோது எமக்கெதிராக வன்சொல்வீச்சுக்கள் இடம்பெறும். இதற்காகவெல்லாம் உண்மைகளை உரக்கச் சொல்லாமல் ஒதுங்கிப்போக முடியாது.
20ம் திருத்தச்சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னமே எப்படியாவது அரசாங்கத்தோடு ஒட்டிக்கொள்ளவேண்டும் என்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் மத்தியில் ஒரு இரகசிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாக அறியமுடிகின்றது. ஒரு நாட்டை சர்வாதிகார ஆட்சிமுறைக்குள் தள்ளுவதற்காக, ஒரு நாட்டிலே முடியாட்சியை ஒத்த ஆட்சிமுறைமையை ஏற்படுத்துவதற்காக முன்னகர்த்தப்படும் இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஒவ்வொரு இலங்கையனும் எழுந்து நிற்கவேண்டிய உயரிய கடமை எமக்கு முன்னால் இருக்கின்றபோது. அதனைப் புறமொதுக்கிவிட்டு மக்கள், நாடு என்று உதட்டளவில் தேனொழுகப்பேசி முஸ்லிம் மக்களின் அறியாமையையும், அப்பாவித்தனத்தையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்த ஒரு கூட்டம் முண்டியடிப்பது மிகுந்த எச்சரிக்கையோடு நோக்கப்படல் வேண்டும்.
முஸ்லிம் இளைஞர்களே! இந்த நாட்டில் எல்லா இன மக்களும் சம உரிமைகளோடு வாழவேண்டுமாக இருந்தால் இந்த நாட்டில் ஜனநாயகமும், சட்டரீதியான ஆட்சியும் இன்றியமையாதவைகளாகும். அதனைப் பாதுகாப்பது இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும். 20ம் திருத்தச்சட்டமூலத்திற்கு சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற அதிருப்திகள் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் (ஆளும்தரப்பு) அதற்கு எதிராக வாக்களிக்கின்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. 2/3 பெரும்பான்மை பலம் கேள்விக்குறியாகியிருக்கும் இத்தருணத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை உறுதி செய்வதற்கான ஒரு சதி முன்னகர்த்தப்படுகின்றது.
முஸ்லிம் சமூகம் கடந்த பொதுதேர்தலில் எத்தகைய அபிலாஷைகளோடு தமது வாக்குகளைப் பதிவு செய்தார்கள் என்பதை நாம் எல்லோரும் அறிந்து வைத்திருக்கின்றோம் “இனவாதமில்லாத ஒரு ஆட்சிமுறையே முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷை” இதற்காகவே அவர்கள் வாக்களித்தார்கள். இப்போது பதவிப்பிசாசுகளும் டீல் மாமாக்களும் மக்களை அபிவிருத்தி என்றும், ஆளும் தரப்போடு ஒட்டியிருத்தல் என்றும் மூளைச்சலவைச் செய்வதற்குத் தொடங்கியிருக்கின்றார்கள். இவர்களும் இவர்களது அல்லக்கைகளும் தமது சுகத்திற்காக முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை மீண்டுமொருதடவை அடகுவைக்கத் தயாராகிவிட்டார்கள்.
மிகவுமே விழிப்பாக இருக்கவேண்டிய தருணமே இதுவாகும், நாம் எப்போதும் விழிப்பாக இருந்தால் அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு வாலாட்டமுடியாது.

Share This Post