தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா?

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா?
 
– புருஜோத்தமன் தங்கமயில் –
 
தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தினையும், கதவடைப்புப் போராட்டத்தினையும் நடத்தி முடித்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கட்சிகள் வாக்கு அரசியல் ரீதியாக தமக்கிடையில் முரண்பட்டுக் கொண்டாலும், நினைவேந்தல் தடை போன்றதொரு முக்கியமான பிரச்சினையில் ஒன்றுமையாக ஓரணியில் திரண்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். ஆனால், ஓரணியில் திரள்வதும், அதன் ஊடக சர்வதேசத்துக்கு செய்தி சொல்வதும் மாத்திரம் அரசியல் வெற்றிகளைப் பெற்றுத் தந்துவிடுமா என்கிற கேள்வி எழுகின்றது.
 
 
தமிழ் மக்களின் அரசியல் எழுச்சி என்பது ஒற்றுமையாக ஓரணியில் திரள்வது என்கிற நிலைப்பாட்டின் போக்கிலேயே நிகழ்ந்து வந்திருக்கின்றது. ஏனெனில், தமிழ் அரசியல், குறிப்பாக தமிழ்த் தேசிய அரசியல் பௌத்த சிங்கள மேலதிக்கத்துக்கு எதிராக எழுந்த ஒன்று. அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய அரசியலுக்கும், அதன் ஓரணித் திரட்சிக்கும் சுதந்திர இலங்கையைத் தாண்டிய வரலாறு உண்டு. ஒற்றுமையும் ஓரணித் திரட்சியும் மாத்திரம் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துவிடும் என்றிருந்தால், தமிழ் மக்கள் அரை நூற்றாண்டுக்கு முன்னரேயே அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டிருப்பார்கள்.
 
 
அப்படிப்பட்ட நிலையில், தேர்தல் மேடைகளில் உதிர்க்கப்படும் ஒற்றுமை, ஓரணிக் கோரிக்கை என்பது உண்மையிலேயே தர்க்க ரீதியானது இல்லை. ஒற்றுமையும் ஓரணித் திரட்சியும் சனக்கூட்டங்களின் ஜனநாயக அடிப்படைகளோடு பலம் பெறும் நடைமுறைதான். அதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால், ஒற்றுமையும் ஓரணித் திரட்சியும் மாத்திரம் எல்லாவற்றையும் பெற்றுத் தந்துவிடாது என்பதுதான் கள யதார்த்தம். அப்படிப்பட்ட நிலையில், ஒற்றுமையையும் ஓரணித் திரட்சியையும் தாண்டி நடைமுறைக் களத்தினைப் புரிந்து கொண்ட அரசியலுக்கு தலைமைகளும், கட்சிகளும், அதன் பின்னால் திரளும் தரப்புக்களும் தயாராக வேண்டும்.
 
 
ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தற்போது நிகழ்ந்து கொண்டிருப்பது தேர்தல்களை குறிவைத்த அரசியல். அது, தூர நோக்கோ, அரசியல் உரிமைகளுக்கான இலக்குகளையோ கொண்டிருப்பதில்லை. தேர்தல் வெற்றி என்கிற ஒற்றைச் சிந்தனையையே அதிகம் கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கும் கட்சிகள் மக்களின் நம்பிக்கையை இழந்து தோற்றுப்போன சந்தர்ப்பங்களில், தங்களைப் பலப்படுத்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தோற்றமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோற்றமும்கூட அவ்வாறான பின்னணிகளைக் கொண்டவைதான். இன்றைக்கும் அப்படியான நிலையொன்று தோன்றிருக்கின்றது. அதன்போக்கில், தோற்றுப்போன தரப்புக்களும், அதன் தலைவர்களும் ஓரணியில் திரள்வது என்கிற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கின்றது.
 
 
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் வரையில், ஏக தலைமைத்துவக் கோசத்தோடு இயங்கிய கூட்டமைப்பு, குறிப்பாக தமிழரசுக் கட்சி இன்றைக்கு ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளோடு இணக்கமான நிலையெடுத்திருப்பது அதன் போக்கிலானது என்பதுதான் பொதுவான உணர்நிலை. திலீபனுக்கான நினைவேந்தல் என்பது தமிழ் மக்களின் பொதுப் பிரச்சினை என்கிற காரணத்தினால், அதன் போக்கில் மற்றைய தமிழ்த் தேசியக் கட்சிகள் தவிர்க்க முடியாத சூழலில், மாவை சேனாதிராஜாவின் அழைப்பை ஏற்றிருக்கின்றன. ஓரணியில் சேர்ந்திருக்கின்றன என்கிறை நிலையைத்தாண்டி, அதில் புரிந்து கொள்ளக் கூடிய அம்சங்கள் ஏதும் இல்லை. அப்படியான நிலையில், வாய்ப்பேச்சில் மாத்திரம் ஒற்றுமை, ஓரணித் திரட்சி என்கிற விடயத்துக்கு என்ன வகையிலான முக்கியத்துவம் இருக்கின்றது?
 
 
எந்தவொரு அரசியலும் அதுசார் போராட்டங்களும் சொந்த மக்களிடம் அங்கீகாரத்தினைப் பெறாமல், பிற தரப்பிடம் அங்கீகாரத்தினைப் பெற முடியாது. தமிழ்த் தேசிய அரசியலின் ஓரணித் திரட்சி என்பது சொந்த மக்களிடம் முதலில் சந்தேகங்களுக்கு அப்பாலான அங்கீகாரத்தினைப் பெற வேண்டும். அது, சுயநல அரசியல் நோக்கங்களுக்கு அப்பாலான தலைமைத்துவங்களினாலேயே சாத்தியப்படும். மாறாக, வரவிருக்கின்ற மாகாண சபைத் தேர்தல்களை இலக்கு வைத்துக் கொண்டான நகர்வு என்றால், அது அயோக்கியத்தனமான நடவடிக்கை. அது, மக்களை இன்னும் இன்னும் சோர்ந்துபோக வைக்கும்.
 
 
தமிழ் மக்கள் போராட்டங்களுக்குள்ளாலேயே வந்தவர்கள். அவர்களுக்கு எந்தவகையிலான போராட்ட வடிவங்களும் புதியவை அல்ல. அதன் கடந்த கால அடைவுகள் குறித்தும் தெளிவான அனுவங்கள் உண்டு. அப்படியான நிலையில், தொடர்ச்சியாக அடையாள போராட்டங்களை நடத்துவதால் என்ன பலன் என்கிற கேள்வியை மக்கள் கேட்கும் கட்டத்தை நோக்கி நகர்த்திவிடக் கூடாது என்பதை அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். போராட்டங்கள் எல்லாமும் வெற்றியைப் பெறுவதில்லைதான். ஆனால், ஏற்கனவே தோற்றுப்போன போராட்ட வடிவங்களை மீண்டும் மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு முன்னால், அதன் வெற்றி வாய்ப்புக்கள் குறித்து கொஞ்சமாகவேனும் சிந்திக்க வேண்டும். அதுதான், புதிய வடிவிலான போராட்டத்தினையும், அதற்கான உத்திகளையும் பேண உதவும். அவை, சர்வதேசத்தினையும், அரசாங்கத்தினையும் அந்தரமான நிலைக்குத் தள்ளும் அளவுக்கு இருக்க வேண்டும்.
 
 
தமிழ்த் தேசிய அரசியல் தோற்றம் பெற்றது முதல், அடையாள உண்ணாவிரதப் போராட்டமும், கதவடைப்புப் போராட்டமும், புறக்கணிப்புப் போராட்டமும் இருக்கும் ஒன்று. அதனைத் தாண்டி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தினையும் நடத்தியிருக்கின்றது. அப்படியான நிலையில், அந்தப் போராட்ட வழிமுறைகளின் இன்றைய வடிவம், என்ன கட்டங்களில் நோக்கப்படுகின்றது, அதற்கான முக்கியத்துவம் என்ன என்பது பற்றியெல்லாம் தெளிவாக ஆராய வேண்டும். அதைவிடுத்து ‘போர் வெடிக்கும்’ என்கிற கோசங்களினால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. மாறாக அவ்வாறான நிலைகள், சொந்த மக்களிடத்திலேயே தீண்டத்தகாத ஒன்றாகவே மாறும்.
 
 
ஆயிரம் நாட்களைத் தாண்டி நீண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம், தமிழ் மக்களினால் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை ஒரு உதாரணமாகக் கொள்ள வேண்டும். இலங்கை அரசை பொறுப்புக்கூற வலியுறுத்திக் கொண்டு ஆரம்பித்த தொடர் போராட்டமொன்று காலம் செல்லச் செல்ல, போராட்டக்காரர்களுக்குள்ளேயே பல உடைவுகளைச் சந்தித்து நின்றது. ஒரு போராட்டத்தை அதன் உன்னதங்களின் போக்கில் நோக்காமல், சுயநல அரசியலுக்காக கட்சிகளும், அதன் தலைமைகளும் கையாள முற்பட்டமையே, அந்தப் போராட்ட வடிவத்தினை அதிகமாக பாதித்தது. ஒரு கட்டத்தில் தமக்கிடையிலேயே போராட்டக்காரர்கள் முட்டி மோதிக்கொள்ளும் நிலை உருவானது. யாரை நோக்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்கிற கட்டம் மாறியது. தென் இலங்கை அதனைக் கண்டு மகிழ்ந்து கொண்டாடியது.
 
 
அதுபோல, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்களுக்கு ஆரம்ப கட்டங்களில் ஆதரவளித்த மக்கள் காலம் செல்லச் செல்ல, அதிலிருந்து நீங்கத் தொடங்கினார்கள். ஏனெனில், நீண்டு செல்லும் போராட்டமொன்றில், முழுமையாக அர்ப்பணிக்கும் அளவுக்கான காலமும் நேரமும் மக்களுக்கு இல்லை. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான காலத்தில் இருக்கின்ற மக்களுக்கு வாழ்வாதாரம் என்கிற நெருக்கடி சொல்லிக் கொள்ளாத அளவுக்கு இருக்கின்றது. அப்படியான நிலையில், மனப்பூர்வமான போராட்டத்துக்கு ஆதரவளித்தாலும், அதில் தொடர்ச்சியாக பங்கெடுத்தல் என்பது சிக்கலான ஒன்றாக மாறுகின்றது. அது, அவர்களின் நாளாந்த நெருக்கடி. இவற்றையெல்லாம் தமிழ்த் தேசிய அரசியல் அனுபவமாகவும் படிப்பினையாகவும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மாறாக, வாகனங்களில் வந்து இறங்கி நின்று, சில மணி நேரம் ஊடகங்களின் பார்வைக்கு முன்னால் போராடுவதால் மாத்திரம் வெற்றி கிடைத்துவிடாது.
 
 
திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னெடுத்த போராட்டங்கள் குறித்தான கேள்விக்கு, “வடக்கில் கடந்த கால நிலை மீண்டும் ஏற்பட்டால், கடந்த காலத்தில் நாங்கள் வழங்கிய பதிலை மீண்டும் வழங்குவோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பதிலளித்திருக்கின்றார்.
 
 
ஒற்றுமையான ஓரணித்திரட்சியுடனான போராட்டம் என்று மார்தட்டிக் கொண்டிருப்பதற்கு முன்னால், எதிரி எவ்வாறான சிந்தனையோடு இருக்கிறான் என்பதையாவது அறிந்து கொள்ள வேண்டும். அதனைப் புரிந்து கொண்டால்தான், அதற்கு ஏற்ற மாதிரி அரசியலையும், அதற்கான போராட்ட வடிவங்களை வடிவமைக்க முடியும்.
 
 
“நீங்கள் கதவைடைப்பு நடத்தினால் ஒன்றும் ஆகப்போவதில்லை. கடந்த காலப் பதிலையே வழங்குவேன்” என்கிற இறுமாப்புள்ள ஆட்சியாளர்களிடம் அவர்கள் மறுதலிக்க முடியாத அரசியலுக்குள் சிக்க வைக்கும் போராட்டத்தினை வடிவமைப்பது குறித்து சிந்திக்க வேண்டும். அது, மீண்டும் முதலாவது படியில் கால் வைப்பதாக இருந்தாலும் பரவாயில்லை. ஏனெனில், வாய்மாலங்களினால் ஒன்றும் ஆகப்போதில்லை. அதனால், அரசியலை உளப்பூர்வமாக அர்த்தபூர்வமாக முன்னெடுக்கும் தரப்புக்களாக தமிழ்த் தலைமைகள் எழ வேண்டும். இல்லையென்றால், வரப்போகும் பேரழிவுகளுக்கு அவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.
 
-தமிழ்மிரரில் வெளியான புருஜோத்தமன் தங்கமயில் எழுதிய பத்தி.

Share This Post