தமிழ் மக்களின் ”காத்திருத்தல்”
– நடராஜா முரளிதரன் –
(2013/02/24)
புலம்பெயர் சமூகங்கள் என்பதனை எந்த நாட்டினதும், எந்த இனத்தினதும், எந்தச் சமூகத்தினதும் நெருக்கடியான காலகட்டங்களிலும் நாம் அவதானிக்கலாம். “யூதர்கள்” ஏனைய இனங்களால் அழிக்கப்பட்டபோது ஏறத்தாள இரண்டாயிரம் வருடங்களாகப் புலம் பெயர்ந்து வந்திருக்கின்றார்கள். தென்னாபிரிக்காவில் பிரிட்டிஸாரின் படையெடுப்புக்குத் தாக்குப் பிடிக்க முடியாத “ஆப்பிரிக்கான்ஸ்” இனத்தவர்கள் தங்களது நிலப்பரப்பைக் கைவிட்டுக் கால்நடைகளையும் , தங்களது உடமைகளையெல்லாம் திரட்டிக் கட்டியெடுத்துக் கொண்டு “கரவன்” என்று அழைக்கப்படும் ஊர்திகள் மூலம் மத்திய நிலப்பரப்பை நோக்கி ஓடினார்கள். “வியட்நாமிய” , “அமெரிக்க” யுத்தத்தின் போது பல இலட்சம் “வியட்நாமிய” மக்கள் “சீனாவுக்கு” ஓடி வந்திருக்கின்றார்கள். “பாகிஸ்தான்” தனது முற்றுகையை வலுப்படுத்திய பொழுது ஒரு கோடி “கிழக்கு வங்காள” முஸ்லீம் மக்கள் அருகிலிருந்த இந்திய மாநிலமான “மேற்கு வங்கத்துக்குள்” நுழைந்து கொண்டார்கள். “துருக்கியால்” நிகழ்த்தப்பட்ட ஆர்மீனிய இனப்படுகொலைகளின் பொழுது “ஆர்மீனியர்கள்” தங்களது நிலப்பரப்புகளை விட்டு வேற்று நாடுகளுக்கு இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். பாலஸ்தீனியர்களுக்கு நிகழ்ந்ததையும் இங்கு சேர்த்துக் கொள்ளுங்கள்!
அண்மைக்காலவரலாறுகளிலே “யூதர்கள்”, “குர்தியர்கள்”, “பாலஸ்தீனியர்கள்”, “கிழக்குத் தீமோரியர்கள்”, “தீபெத்தியர்கள்”, “தென் சூடானியர்கள்”, “கொசொவோக்கள்”, “இலங்கைத் தமிழர்கள்”, “கியூபன்கள்”, “மெக்சிக்கர்கள்” என இந்தத் தொடர்ச்சி நீண்டு கொண்டேயிருக்கிறது. இவ்வாறு இடம்பெயர்ந்து மேற்குலகில் குடியேறியவர்கள் பொருளாதார ரீதியில் சில அனுகூலங்களைப் பெற்று வாழக்கூடியதாக இருக்கின்றது.
ஆகவே தாங்கள் வாழ்ந்த நாடுகளின் உள் முரண்பாட்டுச் சிக்கலின் பக்க விளைவாக நாடு மாறியோர் “காசு காய்க்கும் மரங்களாக” நோக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது. இந்தக் “காசு காய்க்கும் மரங்கள்” எங்கெங்கு போராட்டங்கள் நிகழ்ந்தனவோ அங்கெல்லாம் தனது தாக்கங்களை நிகழ்த்தியிருக்கும்.
வறுமையில் வாடிய குடும்பங்களுக்கு நிதிகளை வாரி வழங்கியிருக்கிறது.தன்னுடைய சகோதரர்களை படிப்பிக்க வைத்திருக்கின்றது. சகோதரிகளுக்கு மணம் புரிந்து வைத்திருக்கின்றது. தம்பி, தங்கையரை வெளிநாடுகளுக்கு வரவழைத்திருக்கின்றது. நாட்டிலிருந்த குடும்ப உறவுகளுக்கு வியாபார மூலதனங்களை உருவாக்கியிருக்கிறது. தங்களது சொந்தங்களுக்கு வீடு வாசல்களை வாங்கியும், கட்ட வைத்தும் சொத்துக்களைக் சேர்க்க வைத்திருக்கின்றது. நோய்வாய்ப்பட்ட பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வைத்தியம் அளித்திருக்கின்றது. இவையெல்லாம் இயல்பாக எங்களைப் போன்ற எல்லா இனக் கூட்டங்களுக்கும் அவர்களது தாய் நிலங்களில் நிகழ்ந்திருக்கின்றது.
எமது விடயத்தில் 1983ஆம் ஆண்டிலிருந்து நோக்கினால் முதல் மூன்று வருடங்களுக்குப் பின்னால் ஈழப் போராட்ட இயக்கங்கள் தங்கள் கால்களில் நிற்க வேண்டிய சூழல் எழுகின்றது. விதிவிலக்காக “எம்ஜிஆரின்” நிதியுதவி “விடுதலைப் புலிகள் அமைப்புக்குக்” கிடைத்திருக்கின்றது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போதும் இந்திய அரசின் நிதியுதவி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் இதனுள் உள்ளடக்கலாம்.
ஆனால் இந்திய அழுத்தத்துக்குள் அகப்படாது விலகிக் கொண்டிருந்த “விடுதலைப் புலிகள்” அமைப்புக்குத் தனது சுய காலிலேயே நிற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஏற்கனவே தனது வலைப்பின்னலை தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்ந்த மேற்கு நாடுகளில் வலுவாகக் கட்டியிருந்த “விடுதலைப் புலிகள் அமைப்பு” நிதிப் பின்தளமாக இதனை மாற்றுகிறது. வெளிநாடுகளில் வாழ்ந்த மக்களும் மண்ணில் நின்று உழைத்த , போராடிய அமைப்புக்குக் கணிசமான நிதியுதவி வழங்க முன் வந்தனர். இத்தகைய வாய்ப்பு ஏன் மற்றைய அமைப்புக்களுக்குக் கிடைக்கவில்லை என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் நோக்க வேண்டும்.
“மூன்றாம் கட்ட ஈழப்போரின் முடிவில் மேற்கு நாடுகளின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின் பின்னணியில் அது, அபிப்பிராயங்களை உருவாக்கவல்லதும், தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தவல்லதுமான ஓர் இரண்டாவது பின்தளம் என்று அழைக்கப்படக்கூடிய வளர்ச்சியைப் பெற்றது” என்பது முழு உண்மையல்ல.
உதாரணத்துக்கு நான் சுவிசில் ஒருங்கிணைப்பாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற ஒரு விடயத்தை எடுத்துக் கொள்ளுகிறேன்.. “கிட்டுவை” இங்கிலாந்தில் இருந்து வெளியேறுமாறு கோருகின்றது அந்த நாட்டின் உள்துறை அமைச்சு. அவர் ஏற்கனவே மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கான விசாவின் அடிப்படையில்தான் அந்த நாட்டுக்குள் நுழைந்திருந்தார் என்பதுதான் எனது ஞாபகம். எனவே அவரைச் சட்டபூர்வமாக எந்த நாட்டுக்குள் கொண்டு செல்லலாம் என்ற பிரச்சினை எழுகிறது இயக்கத்துக்கு. அந்தச் சந்தர்ப்பத்திலே நானும் , திலகரும், அன்ரனும் “பேர்ணில்” அமைந்துள்ள அகதிகள் திணைக்களத் தலைமை அலுவலகத்தில் “சுவிசின்” அகதிகள் துறைக்கான ஆணையாளர் “பீற்றர் ஆர்பென்ஸை” சந்திக்கின்றோம்.
“ஆர்பென்சுக்கு” நிலைமைகளை எடுத்து விளக்கி “கிட்டுவை” சுவிசிற்குள் அழைத்து வருவதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டது எங்களால். ஆனால் “ஆர்பென்ஸின்” நோக்கம் வேறு! “விடுதலைப் புலிகள்” அமைப்பின் மிக முக்கிய பொறுப்பில் இருப்பவர் ஒருவரை வரவழைத்து அவரோடு பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாகத் “தற்காலிக போர் நிறுத்தம்” ஒன்றை இலங்கை அரசோடு ஏற்படுத்துவதே “ஆர்பென்சின்” எண்ணம்.
ஏனெனில் அகதிகள் பெருமளவில் தங்களது நாட்டுக்குள் நுழைவதை “சுவிஸ்” நாட்டவர்களில் பெரும்பான்மையோர் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே பெருகி வரும் தமிழ் அகதிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைத் தடுத்தாக வேண்டும். அந்தத் தந்திரோபாயத்தின் அடிப்படையில் “ஆர்பென்ஸ்” காய்ளை நகர்த்தினார். அதனால் சிறிது காலம் “கிட்டுவுக்கு” “சுவிசில்” வாழுவதற்கான அனுமதி மறைமுகமாக “சுவிஸ்” அரசினால் வழங்கப்பட்டது. ஆனால் அவர்களது முயற்சி நிறைவேறவில்லை. பின்பு அவர்களாகவே “கிட்டுவை” வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்கள். நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவர்கள் செய்த உதவியைக் கருத்திற் கொண்டு “கிட்டுவும்” வெளியே செல்வதென முடிவெடுத்தார்.
இங்கு உலகமயமாதல் சூழலில் ஒவ்வொரு நாடுகளினதும் நலன்கள் இன்னுமொரு நாட்டுடன் பின்னிப்பிணைந்துள்ளதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஆகவே அந்த நலன்களின் அடிப்படையில் சில விடயங்களைச் செய்ய வேண்டியதாகிறது. அதற்காக முழு நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருத்தல் என்பதல்ல அதன் அர்த்தம் என்பதை மீண்டும், மீண்டும் இங்கு வலியுறுத்த வேண்டியுள்ளது. இது பலம் வாய்ந்த எதிரியிடமிருந்து பலவீனமானவன் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நிகழ்த்துகின்ற செயற்பாட்டுத்தளம்.
தமிழர்கள் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளையில் மேற்கை நோக்கி, தமிழ் நாட்டை நோக்கிக் காத்திருந்தார்கள் என்பதைச் சிலர் “குற்றப் பத்திரிகை” போன்று மீட்டுகின்றார்கள் என்றே நினைத்துக் கொள்ள நேர்கிறது. “ஏகாதிபத்தியம்”, “நவகாலனித்துவம்”, “உலகமயமாதல்” போன்ற அனைத்து வடிவங்கள் தொடர்பான எமது விமர்சனங்களைத் தாண்டி இவ்வாறான நாடுகளில் தான் நாங்கள் எங்களுக்கு இழைக்கப்படுகின்ற இன்னல்களுக்கு எதிராகப் பேசவும், எழுதவும், போராடவும் கூடியதாக உள்ளது. குறைந்த பட்சம் “தாராளவாத ஜனநாயகம்” தரும் இடைவெளியில் உலக மனித உரிமை உடன்படிக்கைகளைப் பற்றியாவது பேச முடிகிறது! இருப்பைத் தக்க வைத்துக் கொண்டு மேலும் தொடருவதற்காக!
இந்த இடத்தில் இன்னுமொன்றையும் கூறியே ஆக வேண்டும். “ஏகாதிபத்தியம்”, “நவகாலனித்துவம்”, “உலகமயமாதல்” என்று வெளுத்து வாங்கி “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்று ஓங்கியுரைக்கும் இடதுசாரி நண்பர்களுக்கும் இந்த “முதலாளித்துவ மேற்குலகம்” தான் இயங்குதற்கான வெளியாக உள்ளது. எனவே அதன் மீதான பயணம் அவசியமாகின்றது. மேலும் அந்த வெளியைக் கடந்து செல்வதற்காகவே அந்தப் பயணம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்!
எந்த ஒரு மனித சமூகமும் அவ்வாறான வெளியிலே தன்னால் ஆனதைத் தனது நலன்களையும் இணைத்தபடி இழுத்துக்கொண்டு செல்லுகிறது. இதனை நாம் முற்றாகப் புறந்தள்ளிவிட முடியாது. மேம்பட்ட சூழ்நிலையை அடைவதற்கான நம்பிக்கைகளின் தளத்திலே இவ்வாறான கட்டுமானங்கள் வரலாறு பூராவும் உருவாக்கப்பட்டு வந்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது செயற்பட்ட “ஓபாமாவிற்கான தமிழர் அமைப்பின்” மூலம் அமெரிக்காவின் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தலாம் என்ற நம்பிக்கை நான் சந்தித்த எந்த ஒரு கனடியத் தமிழனிடத்தும் இருந்ததை நான் அறியேன். “வன்னிப் பெருநிலத்தில் சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கை பரவலாகக் காணப்பட்டது” என்று சொல்லப்படுகிறது. “ஓபாமாவின் பதவியேற்பு உரையின்போது அவர் ஈழத்தமிழர்களைப் பற்றிக் குறிப்பிடுவார் என்றொரு வதந்தியும் உலவியது” என்பதும் அதனோடு இணைந்த செய்திகளில் ஒன்று!
முள்ளிவாய்க்காலின் புறங்களில் நிகழ்ந்து கொண்டிருந்த “மாபெரும் மனித அவலம்” அவ்வாறான இறுதி நம்பிக்கைகளுக்கு அந்த மக்களை இட்டுச் சென்றதா ? என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
“எதுவும் நடக்கவில்லை” என்பதுதான் அறுதியாக அங்கு நிகழ முடியும் என்பதை அரசியல் அறிந்த அனைவரும் தெரிந்தே வைத்திருந்தார்கள். அனால் அது அவர்களது வெளிப்பாடுகளில், சொல்லாடல்களில் நிகழாமல் இருந்திருக்கலாம். தாங்கள் காத்திருந்த எந்தக் கப்பல்களும் வந்து சேராத நம்பிக்கை உடைந்த ஊழிப் பெருங்காற்று தாண்டவம் ஆடியதையே அந்த மக்கள் கண்டிருந்தார்கள்.
எத்தனையோ பேரரசுகள் வீழ்ந்து மடிந்த சரிதங்களின் இறுதிக்களம் நிலம் சிறுத்துக் கொண்டு வருவதற்கான காட்சிப்புல விரிவாகவே இருந்திருக்கும். ஆனால் இங்கு ஓடுக்கப்பட்டவன் நிலை கொண்ட இறுதிக் கைபிடி மண்ணும் தாரை வார்க்கப்படும் குத்திமுறியும் சோகப் படலம்! ஆனால் நம்பிக்கைகள் அற்றும் நம்பிக்கைகளுடனும் ஆகிய கலவைகளுடன்தான் உலகப் பெரு வரலாறுகளில் சின்னஞ்சிறிய இனங்கள் தப்பிப் பிழைத்திருக்கின்றன. அழிக்கப்பட்டிருக்கின்றன. இதில் எதனை நாங்கள் தேர்வு செய்யலாம் ?